தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தவெக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து ராஜினாமா செய்தார். இந்த வெற்றிகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பெரம்பூர் தொகுதியில் விஜய் தன்னை எதிர்த்த திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை விட 53,715 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், வாக்காளர்கள் எஸ். தினேஷ் மற்றும் டி.என். லட்சுமி நரசிம்மன் ஆகிய மூவர் தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனி வழக்கு தொடர்ந்துள்ளார். மொத்தம் நான்கு வழக்குகள் விஜய்க்கு எதிராக உள்ளன. இந்த வழக்குகளில் முக்கிய குற்றச்சாட்டுகள் தேர்தல் ஊழல் நடைமுறைகள், வேட்புமனு உடன் தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழிப் படிவங்களில் முக்கிய தகவல்களை மறைத்தல், மற்றும் குழந்தைகளைப் பயன்படுத்தி பெரியவர்களை வாக்களிக்க வற்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆகும்.
இதையும் படிங்க: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!
இந்த மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த பிறகு, சென்னை உயர்நீதிமன்றம் முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பி, 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.
இதையும் படிங்க: விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!