சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், இன்று ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை சுமார் 110 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் உணவகங்கள், டீ கடைகள் மற்றும் கேட்டரிங் தொழில் செய்வோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதன் எதிரொலியாக ஹோட்டல் உணவுகளின் விலையும் உயரக்கூடும் என்பதால் இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கவலையடைந்துள்ளனர்.
புத்தாண்டைக் கொண்டாடி வரும் மக்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வு என்ற கசப்பான செய்தியை வழங்கியுள்ளன. இன்றைய நிலவரப்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ₹110 உயர்த்தப்பட்டு, ₹1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களான செங்கல்பட்டில் ₹1,849.50 என்றும், கோயம்புத்தூரில் ₹1,796 என்றும் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் போக்குவரத்து செலவு மற்றும் வரிகளைப் பொறுத்து ₹111 வரை இந்த உயர்வு காணப்படுகிறது. அதேசமயம், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது சாமான்ய மக்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
இருப்பினும், வணிக சிலிண்டர் விலை உயர்வு என்பது நேரடியாக உணவகங்கள் மற்றும் பேக்கரிகளின் உற்பத்திச் செலவை அதிகரிக்கும். கடந்த சில மாதங்களாகவே வணிக சிலிண்டர் விலை ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில், இந்த ₹110 உயர்வு என்பது வியாபாரிகளுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வால் தத்தளித்து வரும் உணவக உரிமையாளர்கள், இப்போது சிலிண்டர் விலையும் கூடியிருப்பதால் டிபன் மற்றும் சாப்பாடு விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது நடுத்தர மக்களை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் புத்தாண்டு... தலை தூக்கும் போதைப்பொருள் சப்ளை... தீவிர சோதனை...!
விமான எரிபொருள் (ATF) விலையிலும் இன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், விமானக் கட்டணங்கள் உயரவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சர்வதேச சந்தை நிலவரங்களைக் காரணம் காட்டி அடிக்கடி உயர்த்தப்படும் எரிவாயு விலை, நாட்டின் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். புத்தாண்டு தினத்தில் கிடைத்துள்ள இந்த விலையேற்றச் செய்தி, தொழில் துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிவாயு விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: ஜன.1 முதல்.. அனைத்து டூவீலர்களுக்கும் இது கட்டாயம் இருக்கணுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!