காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மத்தியில் கீழே இறங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்த 2010 காமென்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கை முடிப்பதாக அமலாக்கப்பிரிவு அளித்த அறிக்கைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதாவது காங்கிரஸ் ஆட்சியில் நடந்த காமென்வெல்த் போட்டியில் ஊழல் நடந்ததாகக் கூறி குற்றச்சாட்டு பதிவு செய்த அமலாக்கப்பிரிவு, தற்போது ஊழல் நடக்கவில்லை என்று கூறி வழக்கை முடித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் கல்மாதி, செயலாளர் லலித் பானோட் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கை அமலாக்கப்பிரிவு பதிவு செய்து விசாரித்த நிலையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நீதிமன்றத்தின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில் “இந்த வழக்கு நீதியைப் பற்றியது அல்ல பாஜக பொய்களை ஆயுதமாக்கியது” என்று குற்றம் சாட்டியது.
இதையும் படிங்க: காங்கிரஸ் கிளப்பிய புது சர்ச்சை... கொந்தளிக்கும் பாஜக... பின்னணி என்ன?
2010ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது, டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது டெல்லியில் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இந்த விளையாட்டை நடத்தியதில் ஏராளமான பணம் சட்டவிரோதமாக கையாளப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

காமென்வெல்த் போட்டி நடத்த ஒதுக்கப்பட்ட பணத்தை ஊழல் செய்து ஒதுக்கியதாகவும், 2 ஒப்பந்தங்களை வழங்கியதில் கையூட்டு வாங்கியதாகவும் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாதி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.
இந்த காமென்வெல்த் ஊழல் வழக்கை ஆயுதமாக எடுத்த அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, மிகப்பெரிய அளவில் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராகவும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராகவும் பிரசாரம் செய்தது. இந்த காமென்வெல்த் ஊழல் வழக்குதான் மன்மோகன் சிங் அரசு சரிவுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த வழக்கை முடிக்கும் அறிக்கை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சஞ்சீவ் அகர்வால் “விசாரணையில், அரசு தரப்பு சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. ஆதலால், அமலாக்கப்பிரிவு விசாரணையின் முடிவில் எந்த குற்றத்தையும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செய்யவில்லை. தற்போதைய நிலையில் இசிஐஆர் தொடர்ந்து இருக்க எந்தக் காரணமும் இல்லை, அமலாக்கப்பிரிவு வழக்கு முடிக்கும் அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்கிறோம்” எனத் தெரிவித்தார்.
சிபிஐ தாக்கல் செய்த ஊழல் வழக்கை முடித்துக்கொள்வதாக ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் ஹேரா கூறுகையில் “பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையும் குறிவைத்து ஆட்சிக்கு வரத் துடித்தனர். இவர்களின் பொய் மூட்டைகள் இப்போது வெளிப்பட்டுவிட்டன.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த வழக்கு முடிக்கப்பட்டதால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குடும்பத்தாரிடமும், காங்கிரஸிடமும் அவதூறு பரப்பியதற்காக, மன்னிப்புக் கோர வேண்டும். அதே போல அரவிந்த் கெஜ்ரிவால், ஷீலா தீட்சித் குடும்பத்தாரிடமும், காங்கிரஸிடமும் மன்னிப்புக் கோர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தபோது பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி.. விளாசிய கார்கே!