காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ஒடிசா முன்னாள் எம்.எல்.ஏ. முகமது மொகிம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் கட்சியின் தொடர் தோல்விகளுக்கு காரணமாக தலைமை முடிவுகளையும், தலைவர்களின் செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
முகமது மொகிம் எழுதிய ஐந்து பக்க கடிதத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வலிமை இழந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் வயது காரணமாக இளைய தலைமுறையினருடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்றும் விமர்சித்திருந்தார். இதனால் ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமந்த பிஸ்வா சர்மா போன்ற இளம் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும், தொடர்ச்சியான தவறான முடிவுகள், மோசமான தலைமை, தகுதியற்றவர்களுக்கு பொறுப்புகளை வழங்கியது ஆகியவையே கட்சியின் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். கட்சித் தலைமைக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதையும் படிங்க: இனி எப்புடி அதிக சீட்டு கேட்க முடியும்? பீகார் தோல்வியால் தமிழக காங் குமுறல்!! திமுக கூட்டணி கட்சிகள் கப்சிப்!

இந்தக் கடிதம் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி முகமது மொகிமை காங்கிரஸ் தேசிய தலைமை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி விமர்சனங்களுக்கு இடமில்லை என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. கட்சியின் தோல்விகளுக்கு காரணம் குறித்து உள்கட்சியில் விவாதங்கள் எழுந்தாலும், தலைமை அதை ஏற்க மறுக்கிறது என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: ரூ. 1 கோடி பரிசு... கேரம் சாம்பியன் கீர்த்தனாவுக்கு மகுடம் சூட்டிய தமிழக அரசு...!