டெல்லி, அக்டோபர் 10: பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து, இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சி, தற்போது தேர்தல் வியூகங்களை வகுக்கும் ‘வார் ரூம்’ அமைப்பதற்கு கூட இடம் கிடைக்காமல் திணறி வருகிறது.
பீஹார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. சக்தி சின் கோகிலின் பங்களாவில் தற்காலிகமாக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இது, ஒரு காலத்தில் நாட்டை ஆண்ட கட்சியின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தி, அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘வார் ரூம்’ என்பது கட்சியின் தொழில்நுட்ப அணியான ‘ஐ.டி. விங்’கில் இருந்து வேறுபட்டது. ஐ.டி. விங், கட்சியின் கொள்கைகளை விளம்பரப்படுத்துதல், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது, மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.
இதையும் படிங்க: அழுத்தம் தரும் ட்ரம்ப்! அசால்ட் செய்யும் மோடி! மக்காச்சோள இறக்குமதிக்கு மசியாத இந்தியா!
ஆனால், வார் ரூம் என்பது தேர்தல் வெற்றிக்காக மட்டுமே இயங்கும் ரகசிய அமைப்பு. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. தொகுதி மக்களின் மனநிலை, வேட்பாளர் தகுதிகள், பிரசார உத்திகள், பேனர் மற்றும் நோட்டீஸ் வடிவமைப்பு போன்ற முக்கிய முடிவுகள் இங்கு எடுக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளுக்கு இந்த வார் ரூம் மையமாக இருந்து வந்தது.
2004 லோக்சபா தேர்தலுக்கு முன், டெல்லியில் உள்ள எண். 99, சவுத் அவென்யூ பங்களாவில் காங்கிரஸின் வார் ரூம் இயங்கியது. 2004-ல் இது எண். 200, குருத்வாரா ரகாப்கஞ்ச் பங்களாவுக்கு மாற்றப்பட்டது. 2023 வரை இந்த பங்களாவில் இருந்து நாடு முழுவதற்குமான தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டன.
ஆனால், 2023-ல் இந்த பங்களா ஒதுக்கப்பட்டிருந்த எம்.பி. பிரதீப் பட்டாச்சார்யா பதவி ஓய்வு பெற்றதும், அது அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் பல எம்.பி.க்களின் இல்லங்களை தற்காலிகமாக பயன்படுத்தி வந்தனர்.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன், சுப்ரமணிய பாரதி சாலையில் உள்ள ஒரு சிறிய பங்களாவில் வார் ரூம் அமைக்கப்பட்டது. இது, காங்கிரஸ் எம்.பி. உத்தம் குமார் ரெட்டிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தெலங்கானா அமைச்சரான பிறகு, அந்த பங்களாவை காலி செய்ய வேண்டியதாயிற்று.
பீஹார் சட்டமன்றத் தேர்தல் 2025 நவம்பரில் நடைபெற உள்ள நிலையில், வார் ரூம் அமைப்பதற்கு மீண்டும் இடம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியாக, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. சக்தி சின் கோகிலின் பங்களாவில் தற்காலிக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், “வார் ரூம் ரகசியமாக செயல்பட வேண்டும். முக்கிய தலைவர்கள் அடிக்கடி வருவர், ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும். ஊடகங்களின் கவனம் படாமல் இருக்க வேண்டும். இதனால், கோகிலின் பங்களா தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், இதுவும் தற்காலிக ஏற்பாடு மட்டுமே. பீஹார் தேர்தல் முடிந்தவுடன், நிரந்தர இடம் தேடி, வார் ரூம் மீண்டும் முழு வீச்சில் செயல்படும்” என்றனர்.
இந்த சம்பவம், ஒரு காலத்தில் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 99 இடங்களைப் பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை மீட்டாலும், அரசியல் வியூகங்களுக்கு நிரந்தர இடம் இல்லாமல் தவிப்பது கட்சிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
பீஹார் தேர்தலில், மகாகத்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்கு வலுவான வியூகங்கள் தேவைப்படுவதால், வார் ரூமின் பணி முக்கியமானது. இந்த தற்காலிக ஏற்பாடு, கட்சியின் உள் அமைப்பு சவால்களை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள்!! எம்பிக்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!