ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுதும் மிகப் பெரிய அளவில் இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. மண்டியில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால், அதீத கனமழை கொட்டியது. இதில், ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன.
கார்கள், டூவீலர்கள், வேன்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, பல கி.மீ.க்கு அப்பால் ஆங்காங்கே கரை ஒதுங்கியுள்ளன. பல இடங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மழை சற்று ஓய்ந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 65 பேர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மண்டியில் மட்டும் 154 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 106 கால்நடைகள் இறந்தன. இந்த மாவட்டத்தில் மட்டும் 14 பேர் மழை, வெள்ளத்திற்கு பலியாகினர். காணாமல் போன 31 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 145 சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. உனா மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில், 10,000 கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதையும் படிங்க: கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் உருக்குலைந்த ஹிமாச்சல்.. 50-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. கண்ணீரில் மக்கள்..!
அதே போல் பிலாஸ்பூர், சம்பா, ஷிம்லா, குலு, கின்னவுர், கங்கரா, சிர்மவுர், சோலான், உனா உட்பட மாநிலத்தின் 12 மாவட்டங்களும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த 20ம் தேதி துவங்கிய பருவமழையின் போது, இதுவரை 14 இடங்களில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் இவ்வளவு மேகவெடிப்புகளை மாநிலம் இதுவரை சந்தித்ததில்லை. இப்படி ஏன் நடக்கிறது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம். பருவமழையின் துவக்கமே இப்படி இருந்தால், இன்னும் செல்லும் நாட்களில் என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 700 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு 5,000 ரூபாய் நிதி உதவி வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறினார்.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல் சுக்கு ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்ததாவது; ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழைக்கு 69பேர் பலியாகியுள்ளனர். 110 பேர் காயம் அடைந்துள்ளனர். காணாமல் போன 37 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டள்ளது. அதிப்படியாக சாலைகள், குடிநீர் வினியோக மையங்கள் மின்சார கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அந்த வகையில், தற்போது வரை 700 கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன்.

மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார். இதுவரை 14 இடங்களில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கு முன் இவ்வளவு முறை இப்படி நடந்ததில்லை. அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும்
ஆாாய்ந்து வருகிறோம் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் உருக்குலைந்த ஹிமாச்சல்.. 50-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. கண்ணீரில் மக்கள்..!