இந்திய நீதித்துறையில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கு ஒரு சம்பவம்! அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யணும்னு கோரி, 145 எம்பிக்கள் கையெழுத்து போட்ட மனு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கு. இந்த மனுவில், பாஜக, காங்கிரஸ், டிடிபி, ஜேடிஎஸ், ஜனசேனா, ஆம் ஆத்மி, சிபிஎம், சிவசேனா (ஷிண்டே பிரிவு), லோக் ஜனசக்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளோட முக்கிய எம்பிக்கள் கையெழுத்து போட்டிருக்காங்க.
இதே மனு, ராஜ்யசபாவில் 63 எதிர்க்கட்சி எம்பிக்கள் கையெழுத்தோட தலைவர் ஜக்தீப் தன்கரிடம் கொடுக்கப்பட்டிருக்கு. இந்த மனுவில், ராகுல் காந்தி, அனுராக் தாகூர், ரவிசங்கர் பிரசாத், சுப்ரியா சுலே, கே.சி.வேணுகோபால், ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெறுறாங்க.
இந்த சர்ச்சைக்கு காரணம், மார்ச் 14, 2025 அன்று, யஷ்வந்த் வர்மாவோட டெல்லியில உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து. தீயை அணைக்க வந்த தீயணைப்பு படையினர், வீட்டு கிடங்கில் பல பை நிறைய பணம், அதுவும் பாதி எரிஞ்ச 500 ரூபாய் நோட்டுகளாக இருந்ததை கண்டுபிடிச்சாங்க.
இதையும் படிங்க: பதவி நீக்கமா? வேணாமே! கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்! பதறிப்போன நீதிபதி!
இது பற்றி டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உடனே தகவல் கொடுத்து, பிறகு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயவுக்கு தெரிவிச்சார். இந்த சம்பவம், நீதித்துறையில் ஊழல் குற்றச்சாட்டாக மாறி, பெரும் புயலை கிளப்பியிருக்கு.

இதையடுத்து, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா, மூணு நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைச்சார். பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேஷ் தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தாங்க.
இவங்களோட 64 பக்க அறிக்கை, “வர்மாவும் அவரோட குடும்பமும் அந்த பணம் இருந்த கிடங்கை கட்டுப்படுத்தினாங்க, இது பெரிய தவறு”னு மே 4-ல உறுதி படுத்தியது. வர்மாவை பதவி விலக சொன்னாங்க, ஆனா அவர் மறுத்துட்டார். இதையடுத்து, அவரை டெல்லி உயர் நீதிமன்றத்துல இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி, நீதிபதி வேலைகளும் பறிக்கப்பட்டது.
வர்மா இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துல மனு தாக்கல் பண்ணி, “விசாரணை நியாயமா நடக்கல, ஆதாரங்களை ஆராயாம முடிவு எடுத்துட்டாங்க”னு வாதாடியிருக்கார். ஆனா, இந்த மனு இன்னும் விசாரணைக்கு வரல.
இப்போ, 145 லோக்சபா எம்பிக்கள், 63 ராஜ்யசபா எம்பிக்கள் கையெழுத்து போட்டு, அவரை பதவி நீக்கணும்னு மனு கொடுத்திருக்காங்க. இந்திய அரசியலமைப்பு பிரிவு 124(4), 217, 218 படி, நீதிபதி பதவி நீக்கத்துக்கு லோக்சபாவில் 100 எம்பிக்கள், ராஜ்யசபாவில் 50 எம்பிக்கள் ஆதரவு தேவை. இப்போ இந்த எண்ணிக்கையை தாண்டி ஆதரவு கிடைச்சிருக்கு.
இந்த மனு இப்போ ஓம் பிர்லாவால ஏற்கப்படுமா, இல்ல ரிஜெக்ட் ஆகுமானு முடிவு செய்யப்படும். ஏற்கப்பட்டா, உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒரு மூத்த சட்ட வல்லுநர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டு, முழு விசாரணை நடக்கும். இந்த விவகாரம், நீதித்துறையின் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்பு குறித்து பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கு.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் சிக்கிய பணத்தால் சிக்கலில் நீதிபதி..! யஷ்வந்த் வர்மா பணி நீக்க தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு!