அதானி எண்டர்பிரைசஸ், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமாக, பலதரப்பட்ட துறைகளில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து விரிவாக்கி வருகிறது. எரிசக்தி, உள்கட்டமைப்பு, விமான நிலைய மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது.

2025-ஆம் நிதியாண்டில், அதானி குழுமம் ரூ.80,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது, இதில் பெரும்பகுதி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் விமான நிலைய திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. சூரிய மின்சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உருவாக இலக்கு வைத்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் UG பட்டம்! விவரங்களை வெளியிடும் உத்தரவுக்கு டெல்லி கோர்ட் தடை..!
இந்நிலையில் டெல்லி நீதிமன்றம், அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) நிறுவனத்திற்கு எதிராக சரிபார்க்கப்படாத, அவதூறு தன்மையுடைய செய்திகளை வெளியிடுவதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் மூத்த சிவில் நீதிபதி அனுஜ் குமார் சிங், AEL நிறுவனத்தின் தொடர்ந்த வழக்கை விசாரித்து இந்த உத்தரவை வழங்கினார்.
இந்த உத்தரவு, பத்திரிகையாளர்கள் பரஞ்ஜோய் குஹா தாக்குர்தா, ரவி நாயர், அபிர் தாஸ்குப்தா, அயஸ்காந்த தாஸ், அயூஷ் ஜோஷி மற்றும் வெளிநாட்டு தொடர்புடைய அமைப்புகளான பாப் பிரவுன் அறக்கட்டளை, ட்ரீம்ஸ்கேப் நெட்வொர்க் இன்டர்நேஷனல் உள்ளிட்டவற்றுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டது.
AEL தாக்கல் செய்த மனுவில், paranjoy.in, adaniwatch.org மற்றும் adanifiles.com.au ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த அவதூறு உள்ளடக்கங்கள், நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, அதன் உலகளாவிய வணிக நடவடிக்கைகளை பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த உள்ளடக்கங்கள் சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்டதாகவும், இது நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் AEL தெரிவித்தது.
நீதிமன்றம், இந்த அவதூறு உள்ளடக்கங்கள் தொடர்ந்து பகிரப்பட்டால், நிறுவனத்தின் பொது உருவத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம் மற்றும் ஊடக விசாரணைக்கு வழிவகுக்கலாம் என்று கருதியது. நீதிபதி, AEL-க்கு ஆதரவாக முதல் பார்வையில் வழக்கு உள்ளதாகவும், வசதியின் சமநிலையும் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் தீர்ப்பளித்தார்.

இதன்படி, பத்திரிகையாளர்கள் மற்றும் இணையதளங்கள் சரிபார்க்கப்படாத அவதூறு உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது, மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட உள்ளடக்கங்களை ஐந்து நாட்களுக்குள் நீக்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு வரும் அக்டோபர் 9ம் தேதி அன்று மேலும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த உத்தரவு, நிறுவனத்தின் நற்பெயரை பாதுகாக்கவும், அதன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவும் என்று AEL தரப்பு வாதிட்டது.
இதையும் படிங்க: தலைக்கு மேல் தொங்கும் கத்தி! செங்கோட்டையனை ஆதரிக்கும் Ex. MPக்கு ஆப்பு வைத்த இபிஎஸ்