டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி நடத்தவிருக்கும் பெரும் பேரணி, தீபாவளி விற்பனையை பாதிக்கும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில் முறைகேடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்தப் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி வர்த்தகம் மற்றும் தொழில் சபை (சி.டி.ஐ) தலைவர் பிரிஜேஷ் கோயல், ராகுல் காந்திக்கு மூன்று கடிதங்கள் எழுதியும் பலன் கிடைக்காததால், இப்போது சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “நவம்பர் 1 அன்று 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாகனங்களுடன் பெருந்திரள் கூடும். சாந்தினி சவுக், சதர் பஜார், காரோல் பாக், கரி பவ்லி உள்ளிட்ட 20 முக்கிய சந்தைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கும். தினசரி ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி, தன்தேரஸ் நவம்பர் 6ஆம் தேதி என்பதால், இந்தக் காலம் வியாபார உச்சகட்டம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பேரணியை நவம்பர் 10 அல்லது 11க்குப் பிறகு மாற்றவும், அல்லது புராரி மைதானத்திற்கு இடமாற்றவும் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

அக்டோபர் மாதத்தில் நடந்த பிற போராட்டங்களால் ஏற்கனவே ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கர்கே முன்னர் “வர்த்தகர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம்” எனக் கூறியிருந்தாலும், ராகுல் காந்தி பேரணியை திட்டமிட்டபடி நடத்துவதில் உறுதியாக உள்ளார்.
அவர், “ஜனநாயகத்தைக் காக்கும் இந்தப் பேரணி எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானதல்ல. ஞானேஷ் குமாரை நீக்கினால் 30 வினாடிகளில் போராட்டம் நின்றுவிடும்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
சோனியா காந்தி அரசியலில் எப்போதும் சமநிலையான முடிவுகளை எடுப்பவர் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் அவரை அணுகியுள்ளனர். இருப்பினும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. பேரணி நடைபெறுமா, ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி பயணத்தில் பரபரப்பு!! அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள், ஆம்புலன்ஸ்.. பலர் படுகாயம்!!