உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வேயில் இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்து நிகழ்ந்தது. சுல்தான்பூர் மாவட்டம் ஹலியாபூர் பகுதியில் சுமார் 89.5 முதல் 91 கிலோமீட்டர் குறியீடு அருகே இந்த சம்பவம் நடந்தது. ராகுல் காந்தியின் கார் முன்னால் சென்றதால் அதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருந்தார்.
விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து போலீசார் தெரிவித்த தகவல்படி, கான்வாயின் முன் சென்ற உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் தனியார் வாகனம் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.
இதில் ஐந்து கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் சேதமடைந்தன. காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்ளிட்ட பலர் சிறு காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. காயமடைந்தோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்துக்குப் பிறகு கான்வாய் சுல்தான்பூர் நோக்கி தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டது.
இதையும் படிங்க: இத கவனமா கேட்டுக்கோங்க ராகுல்.. அடுத்த 30 வருஷத்துக்கு காங். ஆட்சிக்கு வராது..!! அமித்ஷா அதிரடி!!

இன்று காலை லக்னோவின் சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் ராகுல் காந்தி வந்திறங்கியபோது நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் உள்ளூர் நிர்வாகிகளும் அவரை வரவேற்றனர். அங்கிருந்து சுல்தான்பூருக்கு சாலை வழியாக புறப்பட்டார். அவர் சென்றது 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து கூறிய கருத்துகள் தொடர்பான அவதூறு வழக்கின் தீர்ப்புக்காக.
சுல்தான்பூர் உள்ளூர் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா 2018 ஆகஸ்ட் 4-ம் தேதி புகார் அளித்திருந்தார். 2023-ல் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றிருந்தார். இன்று சிறப்பு எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விபத்து தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. ராகுல் காந்தி தற்போது மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. விபத்துக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தை அடைந்தார் என்பதும் தெரிகிறது.
இதையும் படிங்க: தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?': ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அமித் ஷா!