டில்லியின் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. இன்று அதிகாலையே ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (AQI) 359 என்ற மோசமான அளவை எட்டியது. பஞ்சாப், ஹரியானாவில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது, வாகன புகை, தீபாவளி பட்டாசு புகை, குறைந்த ஈரப்பதம் ஆகியவை சேர்ந்து இதை ஏற்படுத்தியுள்ளன.
காற்றின் தரத்தை மேம்படுத்த ஐஐடி கான்பூர் உதவியுடன் செயற்கை மழை (மேக விதைப்பு) திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இதுவும் பலன் அளிக்கவில்லை. மக்கள் மூச்சுத் திணறலால் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
புதன்கிழமை திட்டமிடப்பட்ட மேக விதைப்பு சோதனை, மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் நிறுத்தப்பட்டது. செவ்வாய்கிழமை இரண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. புராரி, வடக்கு கரோல் பாக், மயூர் விஹார், பத்லி உள்ளிட்ட இடங்களில் இவை நடந்தன. டில்லியில் மழை பெய்யவில்லை. நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் சிறிது மழை பதிவானது. ஈரப்பதம் 15-20 சதவீதம் மட்டுமே இருந்ததால் மழை தூண்ட முடியவில்லை என்று ஐஐடி கான்பூர் அறிக்கை தெரிவித்தது.
இதையும் படிங்க: தீராத சிக்கலில் டெல்லி!! தோல்வியில் முடிந்த செயற்கை மழை திட்டம்?! ஏமாற்றிய வானிலை!
ஆனால், சோதனை சில நன்மைகளைத் தந்தது. பிஎம் 2.5 மற்றும் பிஎம்10 அளவுகளில் 6-10 சதவீதம் குறைவு ஏற்பட்டது. மயூர் விஹார், கரோல் பாக், புராரி ஆகிய இடங்களில் பிஎம் 2.5 அளவு முறையே 221, 230, 229 ஆக இருந்தது.

சோதனைக்குப் பின் 207, 206, 203 ஆக குறைந்தது. பிஎம்10 அளவு 207, 206, 209 ஆக இருந்து 177, 163, 177 ஆக குறைந்தது. இது குறைந்த ஈரப்பதத்திலும் மேக விதைப்பு காற்று தரத்தை மேம்படுத்தும் என்று காட்டுகிறது.
இந்த அவதானிப்புகள் எதிர்கால திட்டங்களுக்கு உதவும் என்று ஐஐடி கான்பூர் கூறியது. தில்லி முழுவதும் கண்காணிப்பு நிலையங்கள் நிகழ்நேர தரவுகளைப் பதிவு செய்தன. தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) சுற்றுச்சூழலை மேம்படுத்த ஐஐடி உறுதியாக உள்ளது.
காற்று மாசு காரணமாக வெளியே வருவோர் மூச்சுத் திணறல் அடைகின்றனர். காலை நடைபயிற்சி, விளையாட்டு போன்றவை நிறுத்தப்பட்டன. பள்ளிகள், அலுவலகங்கள் பாதிக்கப்பட்டன. டில்லி அரசு GRAP-4 நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. டிரக்குகள் நுழைவு தடை, கட்டுமானப் பணிகள் நிறுத்தம் போன்றவை அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாசு, ஆண்டுதோறும் நவம்பரில் தீவிரமடைகிறது. செயற்கை மழை தோல்வி, மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நிபுணர்கள், நீண்டகால தீர்வுகள் தேவை என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தீராத சிக்கலில் டெல்லி!! தோல்வியில் முடிந்த செயற்கை மழை திட்டம்?! ஏமாற்றிய வானிலை!