டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சி முதல்கட்டத்தில் தோல்வியடைந்தது. ஐஐடி கான்பூர் நடத்திய சோதனையில், மேகங்களில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருந்ததே காரணம் என்று தெரியவந்துள்ளது.
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி வரை காற்று மாசு கொடுமையாக உயர்கிறது. பயிர் கழிவு எரிப்பு, வாகன புகை, கட்டுமான தூசி, குளிர்கால காற்றோட்டக் குறைவு ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் சுவாசப் பிரச்சினை, இருமல், நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்த மாசை குறைக்க டெல்லி அரசு செயற்கை மழை (மேக விதைப்பு) திட்டத்தை தொடங்கியது. மே 7-இல் 3.21 கோடி ரூபாய் செலவில் 5 சோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த வாரம் புராரி பகுதியில் முதல் சோதனை நடந்தது. நேற்று (அக்டோபர் 28) இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: விண்ணில் பாயும் பாகுபலி!! 4400 கிலோ எடை கொண்ட GSAT-7R! கெத்து காட்டும் இஸ்ரோ!
கான்பூரில் இருந்து விமானம் புறப்பட்டு, டெல்லி மேல் வானில் 14 எரிப்புகள் (flares) சுடப்பட்டன. ஒவ்வொரு எரிப்பிலும் 20% வெள்ளி அயோடைடு, மீதி பாறை உப்பு (rock salt), சாதாரண உப்பு கலந்திருந்தது. மழை சில மணி நேரத்தில் பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை வரவில்லை.

ஐஐடி கான்பூர் இயக்குனர் மணிந்திர அகர்வால் கூறுகையில், “மேகங்களில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருந்தது. 50%க்கு மேல் ஈரப்பதம் தேவை. நேற்று 10-15% மட்டுமே இருந்தது. இது அவசரகால நடவடிக்கைதான், நிரந்தர தீர்வு அல்ல. இன்று (அக்டோபர் 29) இரு விமானங்கள் மூலம் மீண்டும் முயற்சி செய்யப்படும்” என்றார்.
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் சர்தார் மஜீந்தர் சிங் சிர்சா கூறியதாவது: “ஐஐடி கான்பூர் நம்பிக்கை தந்ததால் முயற்சி செய்தோம். ஈரப்பதம் குறைவால் மழை வரவில்லை. சோதனைகள் தொடரும்” என்றார். இருப்பினும், நேற்று மாலை 4 மணிக்கு நொய்டாவில் 0.1 மி.மீ. மழையும், கிரேட்டர் நொய்டாவில் இரு மடங்கு மழையும் பெய்ததாக அரசு தெரிவித்தது. ஆனால் டெல்லி நகரில் மழை இல்லை.
மக்கள் ஆண்டுதோறும் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். செயற்கை மழை நிரந்தர தீர்வு அல்ல என்பதை வல்லுநர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இருப்பினும், அவசர நிலையில் மாசை குறைக்க இது ஒரு வழி என்று அரசு நம்புகிறது.
இதையும் படிங்க: மின்சாரப் பேருந்து...! தனியாருக்கு கொடுத்ததால் நஷ்டமா? அதிமுக புகாருக்கு சிவசங்கர் நெத்தியடி பதில்...!