தமிழக அரசியலில் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஒரு முக்கிய திருப்பம் இன்று நிகழ்ந்துள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) முதன்முறையாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ளது. இதன்மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், தேமுதிக திமுகவுடன் கைகோர்த்துள்ளது.

தேமுதிக தலைமை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்தது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்புக்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேமுதிகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் விருப்பத்தின்படி திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். இது முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. சீட் பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் பின்னர் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தலில் தானும் போட்டி..!! விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா திட்டவட்டம்..!!
இந்தக் கூட்டணி அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தேமுதிக தொடங்கப்பட்ட 2005 முதல் பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றாலும் – அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்டவை – திமுகவுடன் ஒருமுறை கூட இணைந்ததில்லை. கடந்த 2011, 2016 தேர்தல்களில் திமுக தேமுதிகவுடன் கூட்டணி விரும்பியது. குறிப்பாக 2016-ல் விஜயகாந்த் இருந்தபோது இது நெருங்கி வந்தது.
அப்போது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, "பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை" என்று உவமையாகக் கூறினார். ஆனால் அது நிறைவேறாமல் போனது. விஜயகாந்த் பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார். 2021 தேர்தலில் தேமுதிக அமமுகவுடன் இணைந்து படுதோல்வியை சந்தித்தது.
அதன்பிறகு 2026 தேர்தலுக்கு முன் தேமுதிக பல கட்சிகளுடன் – திமுக, அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்டவைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 10 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சில சமயங்களில் பாஜக கூட்டணிக்கு வந்தால் மத்திய இணை அமைச்சர் பதவி கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கோவை ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் எஸ்.பி. வேலுமணியும் பிரேமலதா விஜயகாந்தும் ஒன்றாகப் பங்கேற்றது அதிமுக-தேமுதிக கூட்டணியை உறுதிப்படுத்துவதாகக் கருதப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. இந்தக் கூட்டணியை உருவாக்குவதில் திமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு முக்கியப் பங்காற்றியுள்ளார் என்கின்றனர் கட்சி வட்டாரங்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க எ.வ. வேலு, சமுதாய ரீதியாக பிரேமலதா விஜயகாந்துடன் உறவு கொண்டவர் என்று கூறப்படுகிறது. பல மாதங்களாக அவர் பிரேமலதாவுடன் தொடர்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

மேலும், விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி விற்பனை விவகாரத்தில் எ.வ. வேலுவின் பங்கு இருந்ததாகவும், பொருளாதார ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் உதவியதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாகவே இன்று இந்த வரலாற்று முடிவு எட்டப்பட்டுள்ளது. கலைஞரின் 2016 உவமை பத்தாண்டுகளுக்குப் பிறகு நனவாகியுள்ளது. இந்தக் கூட்டணி திமுகவுக்கு வடமாவட்டங்களில் கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!