உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சர்க்கரை ஆகியவை போதுமான அளவில் கையிருப்பு உள்ளதால், வதந்திகள் எதையும் நம்பவேண்டாம் என்று மத்திய அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் இந்திய எல்லைஓர மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் ட்ரோன்களை ஏவி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயன்றது, ஆனால், அதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதையடுத்து, பதிலடியாக பாகிஸ்தான் விமானத் தளங்கள் மீது இந்திய ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது.
இதையும் படிங்க: 8 ஆயிரம் கணக்குகள் முடக்கம்..! மோடி அரசின் அதிரடி உத்தரவுக்குப் பணிந்த எக்ஸ் தளம்..!
இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் தீவிரமாகிவருவதால், பல்வேறு வதந்திகளை சமூக வலைத்தளத்தில் பலரும் பரப்பி வருகிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு வந்துவிடும் என்று புரளியை கிளப்பிவிட்ட நிலையில், நேற்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் மத்திய அரசிடம் உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், கோதுமை ஆகியவை போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மத்திய உணவு மற்றும் நுகர்வோர்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை. வழக்கமான தேவையைவிட அதிகமான அ ளவில் இந்தியாவிடம் உணவுப் பொருட்கள் கையிருப்பு இருக்கின்றன. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சன்னா, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு வகைகள் அதிகமான அளவில் கையிருப்பு உள்ளன. இவற்றில் எந்த பற்றாக்குறையும் இல்லை, ஆதலால் மக்கள் யாரும் உணவுப் பொருட்களில் பற்றாக்குறை வந்துவிடும் என்று தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம். உணவுப் பொருட்களை அதிகம் வாங்கிக் குவிக்கவும் தேவையில்லை.

நாட்டின் உணவுப் பொருட்கள் கையிருப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம். நம்மிடம் தேவைக்கும் அதிகமாக உணவுப் பொருட்கள் கையிருப்பு இருக்கிறது. இதுபோன்ற வதந்திகளுக்கு செவிசாய்க்காதீர்கள். வர்த்தகர்கள், மொத்த வணிகர்கள், சில்லரை வர்த்தகர்கள், நிறுவனங்கள் நேரடியாகவும், கூட்டுறவு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வாயிலாக வழக்கம்போல் தானியங்களை விற்பது, வாங்குவதில் ஈடுபடுகிறார்கள். யாரேனும் உணவுப் பொருட்களை பதுக்கினால், அதிக விலைக்கு விற்றால், அத்தியாவசிய பொருட்கள் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய அரசிடம் தற்போது 356.42லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், கோதுமை 383.32 மெட்ரிக் டன் கையிருப்பு இருக்கிறது. தேவைப்படும் அளவுக்கு அதிகமாகவே கையிருப்பு வைத்துள்ளது மோடி அரசு. 17 லட்சம் மெட்ரிக் டன் அளவு சமையல் எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. கடுகு எண்ணைய் உற்பத்தியும் சீசனில் தீவிரமாக இருக்கிறது.
சர்க்கரையைப் பொருத்தவரை 79 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்த 262 லட்சம் மெட்ரிக் டன் வரை கையிருப்பு வைத்துள்ளோம். இப்போதுள்ள கையிருப்பு குறைந்தபட்சம் 5 மாதங்கள் தேவையை நிறைவு செய்யும்” இவ்வாறு மத்திய அமைச்சர் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாக்.-ன் ‘பொய்யான பரப்புரை’க்கு பலியாகாதீர்கள்.. நெட்டிசன்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!