டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்காமல் மக்களின் உயிருடன் விளையாடுவதாக தமிழக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாகக் கண்டித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசின் அலட்சியப் போக்கு மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 21ஆம் தேதி மட்டும் 71 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டிருப்பதை அவர் குறிப்பிட்டு, இது அரசின் தோல்வியை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வை சுட்டிக்காட்டி, தமிழக அரசு முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர்களின் உயிர் பறிபோன இந்தச் சம்பவம் அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக அதிமுக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசின் சுணக்கம் காரணமாக டெங்கு மளமளவென பரவி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பருவகால மாற்றங்கள் மற்றும் மழைக்காலங்களில் கொசுக்கள் பெருகுவது இயல்பு என்றாலும், அதனைத் தடுக்கும் வகையில் சுகாதாரப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுத்தாதது தான் தற்போதைய நிலைக்குக் காரணம் என்று அவர் விளக்கினார். டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சரே கலந்து கொள்ளவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய முக்கியக் கூட்டங்களில் அமைச்சர் பங்கேற்காதது அரசின் முன்னுரிமைகளைப் பற்றிய சந்தேகத்தை எழுப்புவதாக அவர் கூறினார். டெங்கு குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டது போதும் என்று அமைச்சர் அருண்ராஜ் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வெறும் வீடியோக்கள் மட்டும் போதாது.
இதையும் படிங்க: 5 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நாசம்! தவெக அரசை விளாசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி!
களப்பணிகளும், சுத்திகரிப்புப் பணிகளும், மருத்துவ வசதிகளும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.டெங்கு குறித்த விளக்கம், முன்னெச்சரிக்கைத் தகவல்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வீடுகளிலும், பொது இடங்களிலும் தேங்கும் நீரை அகற்றுவது, கொசு வலைகளைப் பயன்படுத்துவது, சுகாதாரமான சூழலைப் பேணுவது போன்ற அடிப்படை நடைமுறைகளை மக்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!