உச்சநீதிமன்றத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த வழக்கு தொடர்பாக பீகார் மாநிலத்தில் 2025 நவம்பரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் தீவிர திருத்தப் பணிகள் குறித்து முக்கியமான விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு, வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் மக்கள் நீக்கப்படுவது தொடர்பாகவும், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு குறித்தும் உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆதார் அட்டை, பாஸ்போர்ட், அல்லது பிற அரசு அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
இதையும் படிங்க: மக்கள் கிட்ட OTP வாங்கும் தடையை நீக்குங்க..! திமுகவின் மேல்முறையீடு ஆக.4ல் விசாரணை..!
இந்த உத்தரவு, பெருமளவில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம் என மனுதாரர்கள் கவலை தெரிவித்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜோய் மல்யா பாக்சி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தலுக்கு மிக அருகில் இத்தகைய தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வது, வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமையலாம். இது, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை மற்றும் எளிய மக்கள், மற்றும் சிறுபான்மை சமூகங்களை பாதிக்கலாம் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்கள் கோருவது, ஆவணங்கள் இல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு வழிவகுக்கலாம். இது, மக்களின் அடிப்படை வாக்குரிமையை மீறுவதாக உள்ளது என்றும் சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறையின் போது 65 லட்சம் பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கைகள் கூறுவதாகவும் வாதிடப்பட்டது.
அப்போது, இந்தத் திருத்தப் பணிகள் வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதற்காகவும், போலி வாக்காளர்களை நீக்குவதற்காகவும், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு மறுவரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இது சட்டப்படியான செயல்முறை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
விசாரணையின் போது, உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு முக்கியமான எச்சரிக்கை விடுத்தது. பெருமளவில் மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், நாங்கள் தலையிடுவோம் என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியது.
தவறு நடந்தால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் என்றும் ஆகஸ்ட் மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு.. தடை உத்தரவை ரத்து பண்ணுங்க! சுப்ரீம் கோர்ட்டில் திமுக மேல்முறையீடு..!