இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாகவும், இதற்கு 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். இவை வெளியிடப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: நாங்க பாகுபாடு காட்டியது இல்ல... ராகுல் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம்!
மகாராஷ்டிரத்தில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்டதாகவும், பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள், தேர்தல் ஆணையத்தின் உயர் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் பாஜகவின் ஆதரவுடன் செயல்படுவதாகவும், இது தேசத்துரோக செயலாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்கு திருட்டு பற்றிய ராகுல் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். ஆளும் மத்திய பாஜக அரசுக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்த நிலையில் விளக்கம் அளித்தார்.
தேர்தல் ஆணையம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்குகள் திருடப்பட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி இந்திய அரசியலமைப்பை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகவும், வாக்காளர்களின் புகைப்படங்களை அனுமதி இல்லாமல் அவர் பயன்படுத்தியதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டினார். மேலும் ராகுல் காந்தியின் புகார் இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் கட்சிகளுக்கு இடையில் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டியதில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் "வாக்குத் திருட்டு"... ராகுல்காந்தியின் பேரணி இன்று முதல் தொடக்கம்!