தலைநகர் புதுடெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசு (Air Pollution) மற்றும் நச்சுப் புகை (Smog) சூழ்நிலை குறித்துத் தாம் வருத்தம் தெரிவிப்பதாக, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிதர் சிங் சிர்சா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். எனினும், ஆளும் கட்சிக்கே முன்னாள் அரசின் மீது பழி சுமத்தும் வினோதமாக, ஆம் ஆத்மி கட்சியின் முந்தைய அரசால் ஏற்பட்ட இச்சூழலை வெறும் 10 மாதங்களுக்குள் மாற்றுவது இயலாத காரியம் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிர்சா, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வருத்தம் தெரிவித்தார். டெல்லியில் நிலவும் ஸ்மோக் (Smog) சூழலுக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இந்தக் காற்றுமாசு ஒருநாள் அல்லது ஒரு வாரத்தில் ஏற்பட்டதல்ல. இது நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டதின் விளைவு. அதே சமயம், தற்போதைய அரசின் மீதான அழுத்தத்தை நீக்கும் வகையில், அவர் கால அவகாசம் கோரினார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து பத்து மாதங்களே ஆகிறது. இத்தனை குறுகிய காலத்தில், ஆம் ஆத்மி அரசால் ஏற்பட்ட இந்தச் சூழலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது இயலாத காரியம். கடந்த காலங்களில் ஆம் ஆத்மி அரசு அலட்சியமாக இருந்ததே இன்றைய மோசமான காற்று மாசிற்குக் காரணம் என்று அமைச்சர் சிர்சா நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அருண் ஜெட்லி மைதானத்தில் விண்ணைப்பிளந்த 'மெஸ்ஸி' முழக்கம்! - ஜாம்பவானை வரவேற்க திரண்ட ரசிகர்கள்!
கடந்த காலங்களில் ஆம் ஆத்மி அரசு இந்தச் சூழலை வேடிக்கை பார்த்ததுடன், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான எந்த ஒரு திட்டமிடலையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட பெருங்குழப்பங்களை நாங்கள் இப்போதுதான் சீர் செய்ய முயன்று வருகிறோம் என்றும், தற்போதைய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
தற்போதைய அரசு காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு புதிய வியூகங்களையும், கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது எனவும், இவற்றின் முழுப் பலனும் வெளிப்படக் கால அவகாசம் தேவை என்றும் அவர் விளக்கம் கொடுத்தார். தலைநகரின் காற்றின் தரத்தை மேம்படுத்தும் சவால் நிறைந்த பணி தொடரும் என்றும், இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவை என்றும் சுற்றுசூழல் அமைச்சர் தனது பேட்டியை முடித்துக் கொண்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், தற்போதைய அமைச்சர் காற்று மாசு விவகாரத்தில் முன்னாள் அரசின் மீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியது டெல்லி அரசியலில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: துணைக் குடியரசு தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் - நயினார் நாகேந்திரன் விளக்கம்!