மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் இன்று திருச்செங்கோடு தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சானார்பாளையம், குமாரபாளையம் மெயின் ரோடு திறந்த வெளி மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களிடையே பேசினார். அப்போது பேசிய அவர், சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடப்பதாக திமுக அரசு அமைத்த குழுவே அறிக்கை கொடுத்தது. அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளனர், ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடுமையாக சாடியிருக்கிறது. இதற்கு என தனி அதிகாரிகள் அமைக்கப்பட்டு, ஒரு மாதம் மேலாகிறது, ஆனால் இன்னமும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை.
அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள், அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை. ஒருநபர் கமிஷன் அமைத்த பிறகு யாரும் வெளியில் தகவல் சொல்லக் கூடாது என்பது நியதி. ஆனால் திமுக அரசு கமிஷன் அமைத்து, அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க வைக்கிறார்கள்.
இதையும் படிங்க: கரூர் துயர சம்பவம்: செந்தில் பாலாஜியை சீண்டிய முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி...!
அரசு அதிகாரிகள், திமுகவின் கைகூலியாக மாறிவிட்டார்கள். கையை காட்டியிருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது என்று சொல்கிறார்கள். இதை சொல்லவா உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது, உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள், அரசியல்வாதிகள் அரசியல் செய்யட்டும். அதிகாரிகள் அரசியல் பேசக்கூடாது. ஏடிஜிபி சம்பவம் பற்றி பேசுகிறார். டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கும்போது ஏடிஜிபி ஒரு கருத்து சொல்கிறார் என்றால், அதன்படிதானே டிஎஸ்பி நடப்பார்? பிறகு எப்படி விசாரணை சரியாக நடைபெறும்? இதன் மூலம் திட்டமிட்டு சதி செய்கின்ற செயல் அம்பலமாகிவிட்டது.
41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது. இதில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு 10ம் தேதி வருகிறது, நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறோம், ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எண்ணம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் நிறைவேறும் என்று நம்புகிறோம், இந்த சதித் திட்டத்திற்கு யார் பொறுப்பாளர்களோ, அவர்கள் இந்த சம்பவத்துக்கு பொறுப்பாளர்கள் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
10 ரூபாய் பற்றி சொன்னால்தான் மக்களுக்கு மன நிறைவு கிடைக்கிறது. அந்தளவுக்கு மக்கள் பாதிப்பு அடைந்துவிட்டனர், செந்தில் பாலாஜி அவர்களே நான் சொல்வது சரியல்ல என்கிறீர்கள், ஆனால், மக்கள் இதையே பேசுகிறார்கள், மக்கள் குரலாகத்தான் நான் ஒலித்துக்கொண்டிருக்கிறேன்.
மக்கள் எண்ணத்தின் அடிப்படையில்தான் எங்கள் கூட்டணி செயல்படுகிறது. மக்கள் கருத்து நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இப்படி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா? எனக்கூறினார்.
இதையும் படிங்க: 10 நாள் கழித்து இதுதேவையா? - கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துடன் வீடியோ காலில் 10 நிமிஷம் பேசிய விஜய்...!