திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில், இந்தியாவின் மிக முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்றாகவும், உலகப் புகழ்பெற்ற ஆன்மிக மையமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகின்றனர். 2024-ம் ஆண்டில் மட்டும் 2 கோடியே 55 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்ததாகவும், 99 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தியதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.1,365 கோடி உண்டியல் காணிக்கையாகவும், 12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனையாகியுள்ளன.

திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக, தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு, தினமும் 1,000 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு திருமலை நம்பி கோயில் அருகே சிறப்பு வரிசையில் மாலை 3 மணிக்கு தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனியார் கார், வேன், ஜீப்களுக்கு வருடாந்திர பயண அட்டை.. புதிய திட்டம் அமல்..!!
இந்நிலையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், மலைப்பாதையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல், திருமலை மலைப்பாதையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் FASTag கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றாத வாகனங்கள் மலைப்பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படாது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி மலையில் உள்ள அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய சோதனைச் சாவடிகளில் FASTag முறை அமல்படுத்தப்பட உள்ளது. ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் fastag வழங்கும் மையம் அமைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பயணம் தடையின்றி, விரைவாகவும் ஒழுங்காகவும் நடைபெறும் என தேவஸ்தானம் எதிர்பார்க்கிறது.
FASTag முறையானது, கட்டணச் சாவடிகளில் வாகனங்கள் நிற்கும் நேரத்தைக் குறைத்து, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவும். இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் FASTag ஒட்டப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்குவதற்காக தொடர்ந்து நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.

இந்த FASTag கட்டாய உத்தரவு, பயண நேரத்தைக் குறைப்பதோடு, மலைப்பாதையில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு குறித்து பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது தேவஸ்தானம். இந்த மாற்றம், திருப்பதி பயணத்தை மேலும் எளிதாக்கி, பக்தர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனியார் கார், வேன், ஜீப்களுக்கு வருடாந்திர பயண அட்டை.. புதிய திட்டம் அமல்..!!