மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், தனியார் கார், வேன் மற்றும் ஜீப்களுக்கு வருடாந்திர பயண அட்டை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், வாகன உரிமையாளர்கள் ஒரே முறை கட்டணம் செலுத்தி, ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தடையின்றி பயணிக்க முடியும்.

3,000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண அட்டையை பெறும் தனியார் கார் / வேன் / ஜீப் உரிமையாளர்கள், ஒரு வருடத்திற்கோ அல்லது 200 முறையோ கட்டணம் இன்றி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச் சாலை கட்டண மையங்களை கடப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: இனி காரின் முன்பக்க கண்ணாடியில் FASTag - வெளியானது அதிரடி அறிவிப்பு...!
தற்போதைய கட்டணத்தின்படி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஒருமுறை பயணம் மேற்கொள்ள கட்டண மையங்களில் ரூபாய் 445 செலுத்த வேண்டும். மாதம் இருமுறை சென்றுவர, பயனர்கள் வருடத்திற்கு 10,680 ரூபாய் செலுத்த வேண்டும். புதிய வருடாந்திர பயண அட்டை மூலம், பயனர்கள் 7,680 ரூபாய் சேமிக்க முடியும். 56 முறை கூடுதலாக கட்டண மையங்களை கடக்கவும் இந்த நடைமுறை உதவும்.
இதேபோல், சென்னை திருச்சி வழித்தடத்தில் பயணிக்கும் பயனர்கள் 8,880 ரூபாய் வரை சேமிக்கவும், 7 கட்டண மையங்களை 168 முறை கடக்கவும் இந்த வருடாந்திர பயண அட்டை நடைமுறை உதவுகிறது. ராஜ்மார்க் யாத்ரா செயலி மற்றும் NHAI இணையதளம் மூலம் மட்டுமே இந்த வருடாந்திர பயண அட்டையை பெறமுடியும்.
வாஹன் தரவு தளத்தின் மூலம் சரிபார்க்கப்பட்ட பின், இந்த வருடாந்திர பயண அட்டையை, வணிகம் அல்லாத மற்றும் தனியார் கார் / ஜீப் / வேன்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு எந்த வணிக வாகனத்திலும் இந்த பயண அட்டை பயன்படுத்தப்பட்டால் அது உடனடியாக செயலிழந்துவிடும்.

இந்த அட்டை, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, ஒரு ஒருங்கிணைந்த, எளிமையான முறையை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வாகன உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் பயண அட்டையை பெறலாம். இதற்கு வாகனத்தின் பதிவு எண், உரிமையாளர் விவரங்கள் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் தேவைப்படும்.
இந்த அட்டை FASTag உடன் இணைக்கப்பட்டு, சுங்கச்சாவடிகளில் தானியங்கி கட்டண வசூல் முறையை எளிதாக்கும். இதனால், பயண நேரம் குறைவதுடன், எரிபொருள் செலவும் மிச்சமாகும். மேலும், இந்த அட்டை மூலம் வாகன உரிமையாளர்களுக்கு மாநில எல்லைகளில் தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படும்.
இத்திட்டம் சுற்றுலா மற்றும் வணிக பயணங்களை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதற்கான கட்டண அமைப்பு மற்றும் விதிமுறைகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி, நவீன போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் மற்றொரு முன்னெடுப்பாகும்.
இதையும் படிங்க: மூன்றே மாதங்களில் இவ்வளவு கோடி வசூலா? - மத்திய அரசின் அட்சய பாத்திரமான ஃபாஸ்டேக்...!