டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என்பது பொய் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்து பேசினார். இதன் பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்துக்கு என்ன செய்ய வேண்டும், என்ன நிலுவையில் உள்ளது என்பதைப் பட்டியலிட்டு பேசினேன். பள்ளிக் கல்வித் துறையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய எஸ்எஸ்ஏ நிதி, கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வது, சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ ரயிலிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளேன்.

செங்கல்பட்டு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் சாதிப்பெயர் விடுதிகளை மாற்றுவது, கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களை பட்டியலினப் பிரிவில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்ட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பது போன்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளேன். பிரதமரை சந்தித்தபோதும் இதே கோரிக்கைகளை வலியறுத்தினேன்.
பிரதமர் செய்ய மாட்டேன் என்றா கூறுவார். செய்வேன் என்றுதான் தெரிவித்தார். போகப் போக பார்ப்போம். ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நான் நேரில் சென்று வலியுறுத்தியதும் செய்து கொடுத்தார். அதை நினைவுப்படுத்தி நன்றி கூறிய போது ‘நீங்கள் வந்து சொன்னதால் செய்தேன்’ என்றார். அதேபோல் இப்போது சொல்லியதையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.

தமிழகம் கோரிய கல்வி நிதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. அமலாக்கத் துறை மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் நியாயமான தீர்ப்பைதான் கூறியுள்ளது. அமலாக்கத் துறை குற்றச்சாட்டுக்கள் அரசியல் ரீதியாக நடைபெறுவது. அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம். டெல்லிக்கு நான் வெள்ளைக் கொடி காட்டப்போவதாக பழனிசாமி கூறியுள்ளார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. அவரிடம் உள்ளது போல் காவிக் கொடியும் இல்லை. சோனியா, ராகுல் காந்தியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. எப்போது டெல்லி வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை. அதேபோல் சந்தித்துள்ளேன். அதே நேரம் அரசியலும் பேசினோம். இல்லை எனக் கூறவில்லை.
இதையும் படிங்க: பேசாமல் கமலாலயத்துக்குள் அதிமுக ஆபிஸ் போட்டுக்குங்க..இபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரகுபதி.!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல், மணல் குவாரி விவகாரத்தில் 5 ஆயிரம் கோடி ஊழல் என்பதெல்லாம், பொய், பித்தலாட்டம். தேவையில்லாமல் பிரச்சாரம் செய்கின்றனர். இக்குற்றச்சாட்டுகளை துறை அமைச்சர்கள் எல்லாம் மறுத்து வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு செய்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இ்ன்னும் செய்வார்கள். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்." என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் தலைமையில் கூடியது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் அதிருப்தி!!