ஜூலை 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி எரிபொருள் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் ஏகாட்டூர் அருகே வந்தபோது, அந்த ரயில் திடீரென தீ பிடித்து எரிந்தது. சரக்கு ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து தீ பிடித்து எரிவதால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

மேலும் ஏகாட்டூரைச் சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கரும்புகையின் பாதிப்பு உணரப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கடுமையான மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரம்.. சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்...!
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் சரக்கு ரயிலில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சரக்கு ரயிலில் 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்தைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சென்னை சென்ட்ரலுக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, சென்ட்ரலில் இருந்து ஆவடி வரை மட்டுமே புறநகர் ரயில் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் ஆங்காங்கே இறங்கி நடந்து செல்கின்றனர். ரயில் பயணிகள் வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இவ்விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளது.
இந்நிலையில் இந்த தீ விபத்து காரணமாக காற்றின் தரம் மோசம் அடைய தொடங்கியுள்ளது. காற்றில் PM2.5 13.6 வரை நுண் துகள்கள் கலந்துள்ளன என்றும் மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது என்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து... 35 மாணவர்களின் நிலை என்ன?