ரயில் நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் இன்று காலை திடீரெனத் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ, அருகில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களுக்குப் பரவியதால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. இந்தச் சம்பவத்தில் வாகனங்கள் மட்டுமன்றி, தண்டவாளத்தில் நின்றிருந்த சோதனை ஓட்டத்திற்கான ரயில் இன்ஜின் ஒன்றும் தீயில் சிக்கி பலத்த சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலையிலேயே நடந்த இந்த விபத்து திருச்சூர் ரயில் பயணிகளிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று காலை அரங்கேறிய விபத்துச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் கறுப்புப் புகைய மண்டலமாக மாற்றியது. வழக்கம்போல ரயில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்ற நிலையில், பார்க்கிங் பகுதியில் திடீரெனப் புகை கிளம்பியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்கத் தொடங்கின. இதில் சுமார் 600 இருசக்கர வாகனங்கள் முழுமையாக எரிந்து எலும்புக்கூடுகளாக மாறின.

பார்க்கிங் பகுதிக்கு அருகிலேயே தண்டவாளத்தில் நின்றிருந்த சோதனை ஓட்டத்திற்காகத் தயார் நிலையில் இருந்த ஒரு ரயில் இன்ஜினிலும் தீப் பரவியது. இன்ஜின் தீப்பிடித்ததால் ரயில் போக்குவரத்துச் சற்று நேரம் பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல் பின்னணியில் உள்ளதா என்பது குறித்துப் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கேரளா டூ தமிழ்நாடு நோ என்ட்ரி! பறவை காய்ச்சலால் எல்லையில் கெடுபிடி! பொது சுகாதாரத்துறை அதிரடி!
வாகனங்களை இழந்த உரிமையாளர்கள் ரயில் நிலையத்தில் திரண்டு கண்ணீர் மல்கக் காட்சியளித்தனர். ரயில் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு வசதிகள் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் நாசமாகியுள்ளன. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் கேரளா மாநிலப் போலீஸார் இணைந்து இந்தத் துயரச் சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
இதையும் படிங்க: பக்தர்கள் உணர்வு முக்கியம்! கேரள கோயில்களில் பவுன்சர்கள் கூடாது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!