உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஜெவார் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முதல் வணிக ரீதியான விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது உத்தரப் பிரதேசத்தின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 28 அன்று இந்த விமான நிலையத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் விமானம் நேற்று காலை புறப்பட்டு, காலை 8:05 மணிக்கு நொய்டா விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த முதல் விமானத்தில், விமான நிலையத் திட்டத்திற்காக தங்கள் நிலங்களை வழங்கிய 172 விவசாயிகள் பயணம் செய்தனர். ஜெவார் தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ. தீரேந்திர சிங் அவர்களை அழைத்துச் சென்றார். விவசாயிகள் பின்னர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சரித்திரமே இல்லை... மண்ணை அள்ளி தூற்றாத குறையாக அண்ணாமலைக்கு சாபம் விட்ட ஹெச்.ராஜா...!

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட இந்த அதிநவீன விமான நிலையம், நொய்டா, காசியாபாத், மீரட், ஆக்ரா உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். நொய்டா விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் 16 முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உயர்தர வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. வட இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த திட்டம், உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையம், இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் மற்றொரு மைல் கல்லாக திகழ்கிறது. முதல் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது மாநில மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெளங்காதவங்க எல்லாம் அமைச்சராகிட்டாங்க... தவெகவை பார்த்து வயிறெரியும் எச்.ராஜா...!