புதுடெல்லியில் உள்ள ரயில்வே அமைச்சகத்தின் தலைமையகத்தில் புல்லட் ரயிலின் அதிநவீன மாதிரி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் மூலம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்தச் செய்தியை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர். தேசிய ஊடகங்களும் இதை முன்னிலைப்படுத்தி வெளியிட்டுள்ளன.
இந்திய ரயில்வே துறையின் தகவலின்படி, மும்பை-அகமதாபாத் இடையிலான 508 கிலோமீட்டர் நீளமுள்ள அதிவேக ரெயில் பாதையில் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில் இயங்கவுள்ளது. எட்டு பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயில், அதிவேக செயல்திறன் மட்டுமின்றி, பயணிகளின் வசதி மற்றும் சொகுசான பயண அனுபவத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

2027 ஆகஸ்ட் 15-க்குள் இந்த ரெயில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை-அகமதாபாத் பாதையில் சபர்மதி, அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, போய்சர், விரார், தானே மற்றும் மும்பை உள்ளிட்ட 12 முக்கிய நிலையங்களில் ரெயில் நின்று செல்லும். இதன் மூலம் மும்பையிலிருந்து அகமதாபாத் வரை தோராயமாக இரண்டு மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
இதையும் படிங்க: "நெல் கொள்முதல் நிலைய லஞ்ச ஒழிப்புக்கு அதிரடி உத்தரவு": இடைத்தரகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் சாட்டை!
தற்போதைய சாதாரண ரெயில்களுடன் ஒப்பிடுகையில் இது பயண நேரத்தை பெருமளவு குறைக்கும், அதேசமயம் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். இத்திட்டத்தின் முக்கிய அம்சமான மும்பை பகுதியில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 350 டன் எடையுள்ள மிகப்பெரிய ராட்சத டன்னலிங் இயந்திரத்தின் முன்பகுதியை வெற்றிகரமாக நிலத்தடியில் இறக்கியுள்ளதாக தேசிய அதிவேக ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) தெரிவித்துள்ளது.
இந்த அதிநவீன இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணிகளை துரிதப்படுத்தும்.ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் இந்தத் திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய ரெயில்வேயை உலகத் தரத்துக்கு உயர்த்தும் வகையில் அவர் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த புல்லட் ரெயில் திட்டம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "தோல்விக்கான காரணம் என்ன?": கோவையில் நாளை கூடுகிறது பாஜக உயர்மட்டக் குழு!