காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தியா 2 அணைகளை அப்பகுதியில் கட்டி வருவதாக சிந்து நதிக்கான முன்னாள் ஆணையரும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப ஆலோசகருமான ஏ.கே.பஜாஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிழிந்தது பாக்., முகத்திரை... அடையாளம் காணப்பட்ட பஹல்காம் தாக்குதல் மாஸ்டர் மைண்ட்..!

இதுகுறித்து பேசிய அவர், கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையை தொடர்ந்து சிந்து நதி நீர் பகிர்வுக்கான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இதைத்தவிர அட்டாரி எல்லை பகுதி மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து போன்ற பல முக்கிய முடிவுகளையும் இந்தியா எடுத்துள்ளது. இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை கைவிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது.

அதன்படி, சிந்து நதி அமைப்பில் பகுல்துல் மற்றும் பர்சார் ஆகிய இரண்டு புதிய நீர் சேமிப்பு அணைகளை கட்டுவதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்த இரண்டு நீர் சேமிப்பு திட்டங்களும் தயாரானால், இந்தியா தனது தேவைக்கேற்ப சிந்து நதி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள நதிகளில் இருந்து அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். அதுமட்டுமல்லாமல், அந்த நீரை ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு விவசாயம் தொடர்பான பணிகளுக்கு திருப்பி விட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் போர்? பிரதமருடன் முப்படை தளபதி முக்கிய ஆலோசனை..!