இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை 21ம் தேதி அன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி, அரசமைப்புச் சட்டத்தின் 67(அ) பிரிவின்படி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் ராஜினாமா கடிதம் அளித்தார். இந்த எதிர்பாராத நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

74 வயதான தன்கர், 2022 ஆகஸ்டில் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2027 வரை இருந்தது. தன்கர், மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் அரசுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டார். மாநிலங்களவைத் தலைவராகவும் எதிர்க்கட்சிகளுடன் பல முறை கருத்து மோதல்களை எதிர்கொண்டார். அவரது ராஜினாமாவுக்கு உடல்நலம் மட்டுமல்ல, அரசியல் காரணங்களும் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
இதையும் படிங்க: ஜெகதீப் தன்கர் ஹவுஸ் அரஸ்ட்!? எதிர்க்கட்சிகள் கேள்வி! அமித்ஷா உடைத்த சீக்ரெட்!!
குறிப்பாக, உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த பதவி நீக்க மனுவை தன்கர் ஏற்றது, மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது அவருக்கும் பாஜக அரசுக்கும் இடையே மோதலைத் தூண்டியிருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தற்காலிகமாக மாநிலங்களவைப் பொறுப்புகளை ஏற்றுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, புதிய துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க விவாதித்து வருகிறது. தன்கரின் வெளியேற்றம், அரசியல் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
பதவி விலகிய பிறகு ஜெகதீப் தன்கர் வெளியில் வராமலேயே இருந்தார். அவர், துணை ஜனாதிபதிக்கு என வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வீட்டின் வளாகத்திலேயே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்ததுடன், அந்த வீட்டிலேயே நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து வந்தார். கடந்த 40 நாட்களாக அங்கேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில் ஜெகதீப் தன்கர், டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். அவர் இந்திய தேசிய லோக் தள கட்சியின் அபய் சிங் சவுதாலாவுக்கு சொந்தமாக டெல்லியின் சத்தார்பூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறினார். அவருக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் பண்ணை வீட்டுக்கு முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டன.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவருக்கு வழங்கப்படும் விதிமுறைகளின்படி, தனக்கு ஒரு 'டைப்-8' வகை பங்களாவை ஒதுக்குமாறு தன்கர் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு 34, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் உள்ள ஒரு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பங்களாவை பழுது பார்த்து தயார்படுத்த சுமார் மூன்று மாதங்கள் ஆகும் என்று மத்திய பொதுப்பணித் துறை (CPWD) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை காடைப்பூர் பகுதியில் உள்ள இந்த பண்ணை வீட்டில் அவர் தங்குவார்.
இதையும் படிங்க: ஜெகதீப் ராஜினாமாவுக்கு பின்னால் மறைந்திருக்கும் கதை! ராகுல்காந்தி முன்வைக்கும் குற்றச்சாட்டு!!