ஆந்திரப் பிரதேசத்தில் மகளிருக்கு இலவச பயணத் திட்டத்தை தெலுங்கு தேசம் கட்சி (TDP) தலைமையிலான கூட்டணி அரசு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அமல்படுத்தவுள்ளது. இத்திட்டம், மாநிலத்தில் உள்ள 11,000 ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (APSRTC) பேருந்துகளில் 74 சதவீதமான சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் பயன்படுத்தப்படும். இதன் மூலம், தினசரி சுமார் 25 லட்சம் பெண்கள் பயனடைய வாய்ப்புள்ளதாகவும், மாதந்தோறும் அரசுக்கு ரூ.277 கோடி கூடுதல் செலவு ஏற்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இத்திட்டத்தின் கீழ் பயணிக்கும் பெண்களுக்கு ‘ஜீரோ கட்டண டிக்கெட்’ வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த டிக்கெட்டில் பயண வழித்தடம், அரசு வழங்கும் முழு மானியம் மற்றும் பயணியின் சேமிப்பு விவரங்கள் இடம்பெறும், இதனால் பெண்கள் தாங்கள் பெறும் பயனை தெளிவாக அறிய முடியும். இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த, APSRTC 2,536 புதிய மின்சார பேருந்துகளை சேர்க்கவும், பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராமப்புற பேருந்துகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்ரோன் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை!! உலக அரங்கில் கெத்து காட்டிய இந்தியா!!
மேலும், பேருந்து நிலையங்களில் குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.996 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ‘சக்தி’ திட்டத்தை ஆய்வு செய்ய அரசு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர், அங்கு 2,000 கூடுதல் பேருந்துகள் மற்றும் 9,000 ஊழியர்கள் சேர்க்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் பெண்களின் இயக்கத்தை மேம்படுத்தி, பொருளாதார சுதந்திரத்தையும், சமூக உள்ளடக்கத்தையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் துவாரகை திருமலை ராவ், பெண்கள் இலவச பேருந்து பயணத்திற்க்காக ஏற்கனவே 750 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் 3,500 புதிய பேருந்துகள் இயக்கபட உள்ளது. மொத்தம் 74 சதவீத அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் கிடைக்கும். அடுத்த 2 மாதங்களில் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் குடிநீர் வசதிகள், நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகள் நிறுவப்படும். பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கிராமப்புற பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் பதவி உயர்வு பெறுவார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: அரசியலை விட்டே போயிடுறேன்!! ஊழல் குற்றச்சாட்டுகளால் நொந்துபோன ரோஜா!