பூட்டானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள காசா மாவட்டத்தின் இமயமலைப் பகுதியில், ஷிண்டபு எனும் பனி ஏரி திடீரென உடைந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. பூட்டானில் ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 பனி ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். பனிப்பாறை உருகி ஏரியின் இயற்கைத் தடுப்பு உடைந்து நீரானது வேகமாக வெளியேறும் நிகழ்வே பனி ஏரி உடைப்பு வெள்ளம் (GLOF) என அழைக்கப்படுகிறது.
இந்த வெள்ளநீர் மோ சூ (Mo Chhu) ஆற்றின் வழியாக கீழ்நிலைப் பகுதிகளை நோக்கி வேகமாகப் பாய்ந்தது. இதனால் காசா சாச்சு பகுதியில் உள்ள பிரபல இயற்கை சூடான நீரூற்று வளாகம் முழுமையாக அழிக்கப்பட்டது. அதேபோல் புனாகா-காசா சாலையின் ஒரு பகுதியும் சேதமடைந்து போக்குவரத்து தடைபட்டது.
சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசன அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன்கூட்டியே மக்களை வெளியேற்றியதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. புனாகா நகரிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீகாங் பகுதியை வெள்ளநீர் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க புனாகா ட்சாங் கோட்டையும் பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்பலமான BLM பிரேம்குமாரின் நாடகம்... கதற, கதற இரவோடு இரவாக கேரள போலீஸ் செய்த தரமான காரியம்...!

இந்த வெள்ளம் இந்தியாவுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. பூட்டானில் தோன்றும் சங்கோஷ் ஆறு (பூட்டானில் புனாத்சாங்சு என அழைக்கப்படுகிறது) அசாம் மற்றும் மேற்கு வங்கம் வழியாகப் பாய்ந்து பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது. இதனால் சங்கோஷ் ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர் ஆணையம் (CWC) மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மற்றும் அசாமின் துப்ரி மாவட்டங்களுக்கு சிறப்பு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதிகள், அலிபுர்துவார், ஜல்பகுரி மாவட்டங்கள் மற்றும் அசாமின் துப்ரி ஆகிய இடங்களில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அலிபுர்துவார் மாவட்டத்தில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கட்டிடங்கள் நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் இமயமலைப் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இரு நாடுகளின் அதிகாரிகளும் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பசும்பொன்னில் குவியும் தலைவர்கள்.! துணை ஜனாதிபதி, தமிழக ஆளுநர் மரியாதை.!!