காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் பாக்., குண்டு வீசி தாக்கியது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் அப்டேட்.. பாக்.-ஐ தோலுரிக்கும் பயணம்.. உலக நாடுகளுக்கு புறப்பட்ட கனிமொழி..!

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், குடியிருப்புகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், உயிரிழப்புகளும், பொருட்சேதமும் ஏற்பட்டது. பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் பூஞ்ச் பகுதியை சேர்ந்த மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இரு தரப்பு சண்டை ஓய்ந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதிகளில் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆய்வு மேற்கொண்டார். வீடுகளை இழந்தோர், வீடுகளில் கடும் சேதம் அடைந்தோருக்கு அரசு உதவி செய்து வருகிறது. பாக்., தாக்குதலில் காயமடைந்தோர் அங்குள்ள அரசு ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்லையோர கிராமங்களில் வசிப்போருக்கு ராணுவத்தினர் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள், மருந்துகள் வழங்கி வருகின்றனர். அந்த பணிகளையும் கவர்னர் சின்ஹா பார்வையிட்டார். குருத்துவராராவுக்கு சென்று வழிபட்ட மனோஜ் சின்ஹா, அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாகிஸ்தானின் அத்துமீறலை இனியும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது. பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி தரப்படும்.

3 நாள் தாக்குதலையே சமாளிக்க முடியாமல் எதிரிகள் கதறினர். உலக நாடுகளிடம் முறையிட்டனர். எதிரிகளை திருப்பி அடித்த நம் முப்படை வீரர்களால் நம் நாட்டிற்கே பெருமை. பாக்., தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து ராணுவம், பிஎஸ்எப் வீரர்களை சந்தித்த சின்ஹா, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக சண்டையிட்ட நம் வீரர்களை பாராட்டிய சின்ஹா அவர்களை நேரில் சந்தித்து பாராட்டினார்.

இதற்கிடேயே காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக கூட்டம் கூடுவதற்கு முன், பஹல்காம் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம், காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மோடியா? ராகுல்காந்தியா? பாக்., விருது யாருக்கு? மாறி மாறி அடித்துக் கொள்ளும் காங்., - பாஜ!