தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான சர்ச்சையை மையமாகக் கொண்டு நடைபெற்றது. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர மறுஆய்வு (எஸ்ஐஆர்) தொடர்பான முடிவுகளில் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியான தகவல்கள் இந்த போராட்டத்திற்கு காரணமாக அமைந்தன.செப்டம்பர் 25 அன்று டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரைசினா சாலையிலிருந்து ஜந்தர் மந்தர் நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஞானேஷ் குமாரின் முகமூடிகளை அணிந்தும், கைகளில் சங்கிலிகளை அணிந்தும் கவனத்தை ஈர்த்தனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். போராட்டக்காரர்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தை சுற்றிவளைக்கும் திட்டத்துடன் முன்னேறினர். வழியில் காவல்துறையினரும் அரை ராணுவப் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். தடைகளும் தடுப்பு வாகனங்களும் அமைக்கப்பட்டிருந்தன.போராட்டக்காரர்கள் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும், வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து பதிவுகளையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
உதய் பானு சிப் பேசும்போது, தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் புனிதத்தையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள அமைப்பு என்றும், ஆணையத்திற்குள்ளேயே வாக்காளர் பட்டியல் தொடர்பான முடிவுகளில் கேள்விகள் எழுப்பப்படும்போது நாட்டுக்கு பதில்களும் பொறுப்புணர்வும் தேவை என்றும் வலியுறுத்தினார். அவர் ஞானேஷ் குமாரை கடுமையாக விமர்சித்து, அவர் தப்பிக்க முடியாது என்றும், இளைஞர் காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக இளைஞர் காங்கிரஸ் ஆன்லைன் மனு ஒன்றையும் தொடங்கியிருந்தது. “ஞானேஷ், இட்ஸ் டண் ப்ரோ” என்ற தலைப்பில் அமைந்த அந்த மனு, ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யவும், கைது செய்து வழக்கு தொடரவும், தேர்தல் செயல்முறை மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவும், ஆணையத்தின் உள் ஆட்சேபனைகளை வெளியிடவும் கோரியது. இளைஞர்களை அணிதிரட்டி தேர்தல் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தை சமூக ஊடகங்களுக்கு அப்பால் கொண்டு செல்வதே இந்த மனுவின் நோக்கம் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... சட்ட நடவடிக்கைக்கு தொடர் வலியுறுத்தல்... உச்ச நீதிமன்றத்தை நாடிய விவகாரம்..!!
போராட்டத்தின் பின்னணியில் வாக்காளர் பட்டியல் மறுஆய்வு தொடர்பான சர்ச்சை உள்ளது. தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த பத்து மாதங்களில் குறைந்தது பதினான்கு முறை வாக்காளர் பதிவு, பெயர் நீக்கம், மீட்டமைப்பு மற்றும் தரவுத்தள அணுகல் போன்ற முடிவுகள் குறித்து ஆட்சேபனைகள் எழுப்பியதாக தகவல்கள் வெளியாயின. இந்த ஆட்சேபனைகள் இருந்தபோதிலும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என இளைஞர் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்களின் நிலை குறித்து தெளிவு இல்லை என்றும், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் கூறினர்.டெல்லியில் மட்டும் அல்லாமல் நாட்டின் பல பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு... அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டம்..! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு.!!