ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி இந்திய ராணுவனத்தினர் போல் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே பஹல்காம் வந்த பயங்கரவாதிகள் 4 இடங்களை வேவு பார்த்து, இறுதியாக பைசரன் பள்ளத்தாக்கை தேர்வு செய்து உள்ளனர். இந்த 7 நாட்களும் உள்ளூர் பயங்கரவாதிகளின் உதவி பெரிய அளவில் இருந்திருக்கிறது. இப்போது அடர்ந்த காட்டுக்குள் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கின்றனர். பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள செல்போன் டவர் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். சம்பவ நேரத்துக்கு முன்னும், பின்னும் பதிவான செல்போன் அழைப்புகள், நம்பர்களை சேகரித்து வருகிறோம். அதில் தாக்குதலுக்கு தொடர்பு இருப்பவர்கள் பற்றி மேலும் விவரம் கிடைக்க கூடும் என என்.ஐ.ஏ தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: திருப்பதியில் 100 மாடுகள் இறப்பு? வெளிவரத் துவங்கும் தேவஸ்தான முறைகேடுகள்..!

இந்த நிலையில் காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து திருப்பதி மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதி மலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அலிபிரி சோதனைச் சாவடி, ஏழுமலையான் கோயில், மலைப்பாதை சாலைகளில் பல இடங்களில் ஆர்டிசி பஸ்கள் மற்றும் பிற தனியார் வாகனங்களில் தீவிர சோதனை செய்யப்பட்டன. பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் கோயிலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவினால் பக்தர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து ஆக்டோபஸ், போலீஸ், தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை நடத்தினர். முதலாவதாக, கபிலதீர்த்தத்திற்கு அருகிலுள்ள மாவட்ட வனத்துறை அலுவலக வளாகத்திலிருந்து ஆக்டோபஸ் படைகள் மூன்று குழுக்களாக, கோயிலுக்குள் நுழைந்து ஒருங்கிணைத்து, பக்தர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை ஒத்திகை செய்து மீட்டனர்.

பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு, சிவில் போலீசார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, ஆயுதப்படை போலீசார், , மருத்துவம் மற்றும் தீயணைப்புப் படையினர், வருவாய் மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களுக்கு முழு விளக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டு மணி நேரம் நடந்த இந்த மாதிரிப் பயிற்சியில் 40 ஆக்டோபஸ் கமாண்டோ வீரர்கள், 10 தேவஸ்தான விஜிலென்ஸ் பணியாளர்கள், 15 போலீசார், 13 ஆயுதப்படை போலீசார் , 12 மருத்துவப் பணியாளர்கள், தீயணைப்பு, ஆயுதம் ஏந்திய போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் பங்கேற்றனர். ஆக்டோபஸ் கூடுதல் எஸ்.பி. ராஜா ரெட்டி, டிஎஸ்பி மதுசூதன் ராவ் ஆகியோரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: தோண்ட தோண்ட முறைகேடுகள்.. 39,000 புரோக்கர்கள் பிளாக் லிஸ்ட்.. அதிர்ச்சியில் திருமலை திருப்பதி..!