சென்னையின் இன்டிகிரல் கோச் ஃபேக்டரி (ICF) இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான பயணிகள் பெட்டி உற்பத்தி அலகுகளில் ஒன்று. சமீபத்தில் இந்த தொழிற்சாலைக்கு சிறந்த உற்பத்தி திறனுக்கான கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. 1955-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த தொழிற்சாலை, பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் பெரிய உள்நாட்டு உற்பத்தி முயற்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் ஆண்டுக்கு 350 பெட்டிகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருந்த இது, படிப்படியாக தொழில்நுட்ப முன்னேற்றம், திறமையான பணியாளர்கள் மற்றும் தொடர் முயற்சிகளால் இன்று உலகின் மிகப்பெரிய ரயில் பெட்டி உற்பத்தி நிலையமாக வளர்ந்துள்ளது.கடந்த 2024-25 நிதியாண்டில் ICF 3,007 பயணிகள் பெட்டிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான அதிகரிப்பு ஆகும்.

மொத்த இந்திய ரயில்வேயில் மூன்று பெரிய பெட்டி உற்பத்தி அலகுகள் (ICF, RCF, MCF) சேர்ந்து 7,134 பெட்டிகளை உற்பத்தி செய்துள்ளன. இதில் ICF-யின் பங்கு மிக அதிகம். குறிப்பாக பொதுமக்களின் தேவைக்கேற்ப நான்-ஏசி பெட்டிகள் (4,601) அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த உற்பத்தி சாதனைக்கு முக்கிய காரணம் வந்தே பாரத் உள்ளிட்ட நவீன ரயில்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி. ICF தான் வந்தே பாரத் ரயில்களை முதலில் வடிவமைத்து உருவாக்கியது. இன்று ஸ்லீப்பர் வகை வந்தே பாரத் உட்பட பல புதிய மாடல்களை தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க: "The Great Honour Nishan of Ethiopia": எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவம்..!!
பெரும்பாலான உதிரி பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிப்பதால் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக ICF திகழ்கிறது. தொடர்ச்சியான உற்பத்தி சாதனை, தரம் மற்றும் அளவு இரண்டிலும் முன்னிலை வகிப்பதால் மீண்டும் தேசிய அளவில் பாராட்டு மற்றும் சிறந்த உற்பத்தி அங்கீகாரம் கிடைத்துள்ளது. ரயில்வே துறையில் 2024-25ம் ஆண்டின் சிறந்த உற்பத்திப் பிரிவுக்கான விருதைப் பெற்றது சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை. இதற்கான கேடயத்தை ICF-ன் பொது மேலாளர் யு.சுப்பா ராவுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க: வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இன்று மாலைக்குள் கரையை கடக்கும்!! வெதர் அப்டேட்!!