நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 13 ஆம் தேதி வெளியாகின. நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ தேர்வில் 10 ஆம் வகுப்பில் 93.66% தேர்ச்சியும், 12 ஆம் வகுப்பில் 88.39% தேர்ச்சியும் பெற்றனர். இதனிடையே சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2025க்கான தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய நடவடிக்கைகளின் வரிசையை சிபிஎஸ்இ தேர்வு வாரியம் திருத்தியது. அதன்படி, மாணவர்கள் தற்போது முதலில் தங்களது மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் நகலைப் பெற வேண்டும்.

இதன் மூலம் அவர்கள் தங்கள் பதில்களையும், வழங்கப்பட்ட மதிப்பெண்களையும் மதிப்பாய்வு செய்ய முடியும். இதை அடுத்து அவர்கள் குறிப்பிட்ட பதில்களின் மதிப்பெண் சரிபார்ப்பு அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஒருசேர இரண்டையும் செய்யலாம். இதற்கு முன்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, விடைத்தாள் நகல் பெறுதல், விடைகளை மறு மதிப்பீடு செய்தல் என்ற நடைமுறை இருந்தது. மதிப்பீடு பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சி.பி.எஸ்.இ வாரியம் இந்த முறையை திருத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 4வது இடத்தில் தமிழகத்தின் சென்னை!!

மேலும் இந்த மாற்றம் மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு முடிவுகளில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அவர்களின் செயல்திறனை நன்கு புரிந்துகொள்ளவும் மதிப்பீட்டு செயல்பாட்டில் உள்ள பிழைகளை சவால் செய்யவும் அனுமதிக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மே 21 ஆம் தேதி முதல் நகல்களைப் பெற விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மே 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெற, மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.700 செலுத்த வேண்டும்.

10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சரிபார்ப்பு மே 28 ஆம் தேதி தொடங்கும், 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சரிபார்ப்பு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும். மறுமதிப்பீடு, மறு கூட்டலில் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டால், அதாவது மதிப்பெண் அதிகரித்தாலோ, அல்லது குறைந்தாலோ அத்தகைய விண்ணப்பதாரர்கள் தங்களிடம் உள்ள மார்க் ஷீட்டை ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறதா? மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?