பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடல்நிலை மோசமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே இருப்பதாக நீதிமன்ற உதவியாளர் அறிக்கை தெரிவித்துள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் உடல்நிலை அவ்வப்போது மோசமடைவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அவர், சமீபத்தில் பார்வை பிரச்சினை காரணமாக பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்.
இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அறிய உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிமன்ற உதவியாளர் சிறையில் அவரை சந்தித்து ஆய்வு செய்தார். அவர் தாக்கல் செய்த அறிக்கையில், வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே இருப்பதாகவும், வலது கண் நரம்பில் அடைப்பு ஏற்பட்டதே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அக்கவுண்ட்ல இன்னும் ரூ.5000 வரலையா..?? அப்போ உடனே இத பண்ணுங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!
2025 அக்டோபர் வரை அவரது பார்வை சீராக இருந்தது. கடந்த சில மாதங்களாக பார்வை மங்கத் தொடங்கியது. ஆனால் சிறை அதிகாரிகள் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தனிமைச் சிறை வாழ்க்கை அவரது உடல்நிலையை மிகவும் பாதித்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, வரும் பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவக் குழு அமைத்து இம்ரான் கானுக்கு முழுமையான பரிசோதனைகள் நடத்த உத்தரவிட்டது. அவரது குடும்ப மருத்துவரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் மற்றொரு ஊழல் வழக்கில் அவருக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவரது உடல்நிலை மோசமடைவதால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆதரவாளர்கள் இம்ரான் கானுக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நீதிமன்ற உத்தரவு இம்ரான் கானின் உடல்நிலைக்கு சரியான சிகிச்சை கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது சிறை வாழ்க்கை தொடர்வதால் அரசியல் பதற்றம் நீடிக்கிறது.
இதையும் படிங்க: அகமதாபாத் விமான விபத்து! விமானியின் திட்டமிட்ட செயலா? இத்தாலி பத்திரிகை புகாருக்கு இந்தியா பதில்!