அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டத்தில், பெங்களூரு - விஜயவாடா இடையேயான அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தில் இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஒரே நாளில் (24 மணி நேரத்தில்) 28.95 கிலோ மீட்டர் நீளமுள்ள பிட்மினஸ் சாலையை அமைத்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜ்பாத் இன்ப்ராகான் நிறுவனம்.
இந்தியாவின் 'பாரத்மாலா பரியோஜனா' இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் என்.எச். 544 ஜி விரைவு நெடுஞ்சாலை, ஆந்திராவின் கொடிகொண்டா (சத்ய சாய் மாவட்டம்) முதல் கர்நாடகாவின் பெங்களூரு வரை 624 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கு மொத்தம் ரூ.19,320 கோடி செலவிடப்படுகிறது. ஆந்திராவில் 8 மாவட்டங்களையும், கர்நாடகாவில் 3 மாவட்டங்களையும் இணைக்கும் இந்த ஆறு வழிச் சாலை, பயண நேரத்தை பெரிதும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நெடுஞ்சாலை 14 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வானவோலு - ஓடுலபள்ளி பிரிவில் ராஜ்பாத் இன்ப்ராகான் நிறுவனம் பணியை மேற்கொண்டது. இந்நிறுவனம் புட்டபர்த்தி அருகே, தொடர்ச்சியாக 10,675 மெட்ரிக் டன் பிட்மினஸ் கான்கிரீட்டைப் பயன்படுத்தி 28.95 கி.மீ. நீள சாலையை ஒரே நாளில் அமைத்துள்ளது. இதற்கு முன்பு இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்நிறுவனம், தற்போது மூன்றாவது முறையாக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இதையும் படிங்க: கமல் கேள்விக்கு கட்காரி பதில்! ராஜ்யசபாவில் சுவாரஸ்யம்! எத்தனால் கலப்பு பெட்ரோலால் பாதிப்பு?
இதே பிரிவில் வானவோலு - வான்கரகுண்டா - ஓடுலபள்ளி இடையே 42.2 கி.மீ. தொடர்ச்சியான இரு வழிப் பிட்மினஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜனவரி 11 ஆம் தேதி வரை தொடரும் இப்பணியின் மூலம் மேலும் இரண்டு கின்னஸ் சாதனைகள் படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சாதனையைப் பெருமைப்படுத்தி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். "இது மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கும், சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியின் தலைமையிலான உட்கட்டமைப்பு பணிகளுக்கும் கிடைத்த பெருமை" என்று அவர் கூறினார். ஜனவரி 12 ஆம் தேதி புட்டபர்த்தியில் நடக்கும் பிரமாண்ட நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்பாத் நிறுவனத்துக்கு கின்னஸ் சான்றிதழை வழங்க உள்ளார்.
பிட்மினஸ் சாலை என்றால் என்ன? கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் 'பிட்மின்' என்ற பிசுபிசுப்பான பொருளைச் சரளைக் கற்களுடன் கலந்து அமைக்கப்படும் சாலை இது. இதில் அடித்தளம், பிணைப்பு அடுக்கு, மேற்பரப்பு அடுக்கு என பல அடுக்குகள் இருக்கும். தண்ணீர் புகாத தன்மை, மென்மை, குறைந்த இரைச்சல், விரைவான கட்டுமானம், குறைந்த செலவு ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். ஆனால் நீண்ட ஆயுளுக்கு தொடர் பராமரிப்பு தேவை.
இந்தச் சாதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணிகளை உலக அளவில் பேசுபொருளாக்கியுள்ளது. பாரத்மாலா திட்டத்தின் மூலம் இந்தியாவின் சாலை உட்கட்டமைப்பு வேகமாக மேம்பட்டு வருவதற்கு இது ஒரு உதாரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானிடம் போர் விமானங்கள் வாங்கும் வங்கதேசம்! இந்தியாவை எதிர்ப்பதில் முழு மும்முரம்! காத்திருக்கும் ஆபத்து?!