ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் உலக அமைதிக்கு கவலை அளிப்பதாகவும், அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நடைபெற்ற விவாதத்தில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் இந்த கருத்துகளை தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய சர்வதேச கடல் வழித்தடங்களில் கப்பல்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் கூறினார்.
பர்வதனேனி ஹரிஷ் பேசுகையில், "ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல்கள் மிகுந்த கவலைக்குரியது. இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனிமேல் கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஈரான் பணத்தில் இருந்து இழப்பீடு... டிரம்பின் அதிரடி அறிவிப்பு!

மேலும், "ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை மீட்டெடுப்பதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலில் ஏற்பட்ட ஒரு சிறிய இடைநிறுத்தத்திற்குப் பிறகு தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. மேலும் பதற்றங்களை உடனடியாகத் தணிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், "மாலுமிகளை இலக்காகக் கொண்ட வன்முறைச் செயல்களையும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் இந்தியா தொடர்ந்து கண்டித்து வருகிறது. வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைக்கும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு இணங்க தடையற்ற கப்பல் போக்குவரத்தும், வர்த்தகமும் விரைவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்" என்றும் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்றம் உலக வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அமைதியான தீர்வை நோக்கி அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பலை தாக்கினால் ஈரான் மின் நிலையங்களில் வெடிகுண்டு வீசுவோம்: டிரம்ப் மிரட்டல்!