காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

கடந்த 8 ஆம் தேதி இரவு தொடங்கிய பாகிஸ்தானின் தாக்குதல் மறுநாள் அதிகாலை வரை நீடித்தது. இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனிடையே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே இது நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்தான் உடனடி போர் நிறுத்தத்திற்கு உதவினேன். இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன.
இதையும் படிங்க: ஒரு லேயரில் தப்பித்தாலும் மற்றொன்றில் மாட்டிக்கொள்வர்... லெஃப்டினன்ட் ஜெனரல் வினோத விளக்கம்!!

ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்றார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி பிரதமர் மோடி, பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்தும் டிரம்பின் கருத்தும் முரணாக இருந்தது. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் வர்த்தகத்தை முன்னிறுத்தி அமெரிக்கா பேசவில்லை என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ராணுவ நடவடிக்கைகள் குறித்து மட்டுமே அமெரிக்காவுடன் பலகட்ட பேச்சு நடந்தது. காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியாவின் ஆயுத பலத்தால் பாக். துப்பாக்கிச்சூட்டை நிறுத்த வேண்டிய நிர்பந்தம். காஷ்மீர் விவகாரத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே இந்தியாவின் நிலைப்பாடு. காஷ்மீர் விவகாரத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை என்ற கொள்கையில் எந்த சமரசமும் இல்லை. சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை பாக். விடுவிப்பதே தீர்வாகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் வர்த்தகத்தை முன்னிறுத்தி அமெரிக்கா பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனைத்தையும் அழித்துவிட்டோம்; எதிர்கால மிஷன்களை மேற்கொள்ள தயார்.. இந்திய ராணுவம் அதிரடி!!