டெல்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் நாகரிகங்கள் உரையாடல் மன்றத்திற்கு பாகிஸ்தான் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த மூன்று நாள் நிகழ்வு, பிரதமர் நரேந்திர மோடியால் 2025ஆம் ஆண்டு சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற எஸ்சிஓ உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்டது.
கலாச்சார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இதில், பிரதமர் மோடி துவக்க விழாவை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணா கிலா (பழைய கோட்டை) வளாகத்தில் நடைபெறும் இந்த மன்றத்தில், 10 உறுப்பு நாடுகளுடன் பார்வையாளர் மற்றும் உரையாடல் பங்காளி நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 25க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அவுரங்கசீப் கான் கிச்சிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமாபாத் இன்னும் தனது பிரதிநிதி குழுவின் தலைவரை உறுதிப்படுத்தவில்லை. 2025 மே மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், பாகிஸ்தான் அமைச்சர் ஒருவருக்கு இந்தியா விடும் முதல் அழைப்பு இதுவாகும்.
இதையும் படிங்க: சொந்த வீரர்களின் உடலை ஏற்காத நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!
அவுரங்கசீப் கிச்சி கலந்துகொண்டால், 2023 மே மாதம் கோவாவில் நடைபெற்ற எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு வந்த அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரிக்குப் பிறகு, இந்தியாவுக்கு வரும் முதல் மூத்த பாகிஸ்தான் அமைச்சர் இவர் ஆவார்.

அக்டோபர் 20 அன்று தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த மன்றத்தை அறிவித்து, அனைத்து உறுப்பு நாடுகளையும் பங்கேற்க அழைத்தார். அதே கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் முன்னிலையில், பயங்கரவாதத்தை எதிர்த்து இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கும் புகலிடம் தருபவர்களுக்கும் எஸ்சிஓவில் இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
செப்டம்பர் 1 முதல் பாகிஸ்தான் எஸ்சிஓவின் சுழற்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, பெலாரஸ், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா 2017இல் முழு உறுப்பினரானது. உறுப்பு நாடுகளிடையே கலாச்சார உறவுகளை வலுப்படுத்தி, பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதே இந்த டெல்லி மன்றத்தின் முக்கிய நோக்கமாகும். பழமையான நாகரிகங்கள், கலை, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்ளும் தளமாக இது அமையும்.
இதையும் படிங்க: திடீரென இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை..!! 28 மாணவர்கள் பரிதாப பலி..!! பாக்.-ல் சோக சம்பவம்..!!