இந்தியா நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் 1.86 லட்சம் கோடி ரூபாய் அந்திய முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று (ஏப்ரல் 27, 2026) புது டெல்லியில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை பெரிதும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 மார்ச் மாதம் பேச்சுவார்த்தை தொடங்கி, அதே ஆண்டு டிசம்பரில் நிறைவு பெற்ற இந்த ஒப்பந்தம் இன்று மதியம் கையெழுத்தானது. நியூசிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர் டாட் மெக்கிளே தலைமையிலான குழு இந்தியா வந்திருந்தது. இந்தியா சார்பில் மத்திய வர்த்தக அமைச்சர் பீயூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்கிளே ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: மனைவியுடன் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த நியூசிலாந்து அமைச்சர்! சுற்றிக் காமித்தார் பியூஸ் கோயல்!

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் அனைத்து பொருட்களும் நியூசிலாந்துக்கு இறக்குமதி செய்யும் போது முழுமையாக வரி இல்லாமல் (100% duty-free) அனுமதிக்கப்படும். நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களில் 95%க்கு வரி குறைக்கப்படும் அல்லது முழுமையாக நீக்கப்படும். மரத்துண்டுகள், வைன், அவகோடா, புளூபெர்ரி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இதில் அடங்கும். இருப்பினும், பால் மற்றும் பால் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படாது.
மேலும், இந்திய மாணவர்களுக்கு 5,000 நியூசிலாந்து விசாக்கள் வழங்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பலனை அளிக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-நியூசிலாந்து இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த FTA, இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும். குறிப்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் நியூசிலாந்து சந்தையை எளிதில் அணுக முடியும். நியூசிலாந்து பொருட்களும் இந்தியாவில் போட்டி விலையில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இன்றைய கையெழுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் கல்வி துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற ஒப்பந்தம்!! நாளை கையெழுத்து! பியூஸ் கோயல் தகவல்!