வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை அரசியல் வன்முறை அல்லது ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று கூறி புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மைமென்சிங் பகுதியில் மத நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (27) வன்முறைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடலை மரத்தில் தலைக்கீழாகத் தொங்கவிட்டு உயிருடன் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற சம்பவங்கள் இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு அதிகரித்துள்ளதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். “மத நிந்தனை என்ற பெயரில் ஒரு ஹிந்து இளைஞரை உயிருடன் தீயிட்டுக் கொன்ற செயலை ஏற்க முடியாது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: சொல்ல முடியாத துயரம்!! சிறுபான்மையினர் எரித்துக்கொல்லப்படும் அட்டூழியம்!! ஷேக் ஹசீனா ஆவேசம்!

வங்கதேச இடைக்கால அரசின் பதவிக்காலத்தில் மட்டும் சிறுபான்மையினருக்கு எதிராக 3,000க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதை அரசியல் வன்முறை என்றோ ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்றோ கூறி புறக்கணிக்க முடியாது என்று வலியுறுத்தினார். வங்கதேசத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடப்பதை இந்தியா ஆதரிக்கிறது என்றும், அதே நேரத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.
மதத்தைப் பாராமல் அனைத்து மக்களையும் பாதுகாக்க வங்கதேச அரசு தனது அரசியலமைப்புக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் இந்தக் கண்டனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் அமைதி திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: மற்றொரு இந்து இளைஞர் அடித்து கொலை!! வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!! பற்றி எரியும் கலவரம்!