போலி தகவல்கள், வதந்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலி பதிவுகள் சமூகத்தில் நம்பிக்கையை அழித்து வருவதாக குற்றம் சாட்டிய மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சமூக ஊடக தளங்கள் பயனர்கள் வெளியிடும் பதிவுகளுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் செயல்படும் டிஜிட்டல் நிறுவனங்கள் நாட்டின் சட்டங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் பண்பாட்டை மதித்து செயல்பட வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். இல்லையெனில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் (Bloomberg New Economy Forum) பேசிய அமைச்சர் வைஷ்ணவ், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். சமூக ஊடக தளங்கள் மற்றும் சமூகத்திற்கு இடையிலான நம்பிக்கை குறைந்து வருவதால் உலகளவில் அனைவரும் கவலை கொண்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: ஈரானிடன் எண்ணெய் கொள்முதல் கூடாது! இந்திய நிறுவனம் உட்பட 17 நிறுவனங்களுக்கு தடை!! ட்ரம்ப் பிடிவாதம்!
போலியான தகவல்கள், வேகமாகப் பரவும் வதந்திகள், டீப் ஃபேக் (deepfakes) மற்றும் AI உருவாக்கம் போன்றவை சமூக நம்பிக்கையை முற்றிலும் அழித்து, ஜனநாயக அமைப்புகளை அச்சுறுத்தி வருவதாக அவர் கூறினார்.

அமைச்சர் வைஷ்ணவின் உரையில் கூறியுள்ளதாவது: “சமூக ஊடக தளங்கள், அவை செயல்படும் நாட்டின் சமூக கட்டமைப்பைப் புரிந்துகொண்டு, அந்நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் இந்திய அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் சமூக-பண்பாட்டு பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும்.
போலி தகவல்கள், வதந்திகள் மற்றும் AI மூலம் உருவாக்கப்படும் செயற்கை உள்ளடக்கங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பயனர்கள் வெளியிடும் ஒவ்வொரு பதிவுக்கும் சமூக ஊடக தளங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். இது சமூக நம்பிக்கையை வலுப்படுத்த உதவும்” என்றார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு, உலகளவில் சமூக ஊடகங்களின் பொறுப்பு குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் சட்டங்கள் (IT Rules 2021) போன்றவை ஏற்கனவே தளங்களை கண்காணிக்கின்றன. ஆனால், AI மற்றும் டீப் ஃபேக் போன்ற புதிய சவால்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் பேச்சு, சமூக ஊடக நிறுவனங்களுக்கு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: துருக்கி பயங்கரவாதியை சந்தித்த உமர்!! சதித்திட்டம் அம்பலம்! என்.ஐ.ஏ விசாரணையில் பகீர்!