புது டெல்லி, டிசம்பர் 13: இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதமான பினாகா பல ஏவுகணை அமைப்பின் (Multi Barrel Rocket Launcher - MBRL) தாக்குதல் தூரத்தை 120 கிலோ மீட்டராக அதிகரிக்கும் பெரிய திட்டத்தை பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது. இதற்காக சுமார் 2,500 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று தெரிகிறது.
ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் நீண்ட தூர தாக்குதல் ஏவுகணைகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த ராக்கெட், இந்திய ராணுவத்தின் திறனை பெரிதும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட்டுகளை உருவாக்கும் பணியை மேற்கொள்ளும். தற்போது பினாகா அமைப்பில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகள் 40 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வரை தூர இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. இனி 120 கிலோ மீட்டர் தூரத்தை எட்டும் வகையில் புதிய ராக்கெட்டுகள் உருவாக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: உள்நாட்டு ஆயுத உற்பத்தியால் ₹2.64 லட்சம் கோடி சேமிப்பு: டிஆர்டிஓ-வை பாராட்டி தள்ளிய மத்திய அரசு!
இந்தத் திட்டத்தின் முதல் கட்ட சோதனைகள் விரைவில் நடத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஏலம் மூலம் உற்பத்தி செய்யும் தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அந்நிறுவனத்துடன் இணைந்து ராக்கெட்டுகள் தயாரிக்கப்படும்.

பினாகா அமைப்பு இந்திய ராணுவத்தின் முக்கியமான ஆயுதங்களில் ஒன்று. ஒரே நேரத்தில் பல ராக்கெட்டுகளை ஏவி பெரிய பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட இது, எல்லைப் பகுதிகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால், இறக்குமதி செலவு குறைவதோடு, தொழில்நுட்ப சுயசார்பும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பினாகா அமைப்புக்கான ஏடிஎம் வகை-1 மற்றும் எம்கே-1 ராக்கெட்டுகளை 10,147 கோடி ரூபாய் மதிப்பில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், ராக்கெட் இலக்கு கணிப்புக்கான 'சக்தி' மென்பொருளை மேம்படுத்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
எல்லைப் பாதுகாப்பில் நீண்ட தூர தாக்குதல் ஆயுதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடனான பதற்றம் கருதி, இந்திய ராணுவம் தனது ஏவுகணை திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பினாகா போன்ற உள்நாட்டு ஆயுதங்கள் இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: பாக்., சீனா வயிற்றில் புளியை கரைக்கும் இந்தியா! களமிறங்கும் அசூரன்! 2 இன்ஜின்!! மணிக்கு 2,500 கி.மீ வேகம்!!