கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்டஈட்டுச் சலுகையை வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் ஏற்பட்ட சிரமங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறிப்பிட்ட நாட்களில், விமான நிலையங்களில் சிக்கித்தவித்தவர்களுக்கும், விமானத்திற்குள் ஏற்றப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கும் பயண வவுச்சர்களை வழங்குவதாக இண்டிகோ அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பயணிக்கும் ரூ.10,000 அல்லது அவர்கள் பயணித்த டிக்கெட் கட்டணம், இதில் எது குறைவாக இருக்கிறதோ அந்தத் தொகைக்கு இணையாக இந்தப் பயண வவுச்சர்கள் வழங்கப்படும்.
ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான முழுக் கட்டணத்தையும் பயணிகள் திரும்பப் பெற்றிருந்தாலும், கூடுதலாக இந்த நஷ்ட ஈட்டு வவுச்சரும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி, அடுத்த ஓர் ஆண்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் இண்டிகோ விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: இண்டிகோ சேவை பாதிப்பு: இறுதி விளக்க அறிக்கையை தர மறுப்பு! - மத்திய துணை செயலாளர் குற்றச்சாட்டு!

இது குறித்துப் பேசிய இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பர்ஸ், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மீண்டும் ஒருமுறை பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளே இந்தச் சேவை பாதிப்புக்குக் காரணம் என்று கூறிய அவர், தற்போது 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலான விமானச் சேவைகள் சரியான நேரத்தில் இயங்கத் தொடங்கிவிட்டதாகவும், நிலைமை சீராகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இண்டிகோ விமான போக்குவரத்து சேவை சீரானது: CEO பீட்டர் எல்பர்ஸ் வீடியோ வெளியீடு!