அண்மையில் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் இதர காரணங்களால் நாடு முழுவதும் இண்டிகோ விமானப் போக்குவரத்துச் சேவையில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் தற்போது முழுமையாக நீங்கி, சேவை சீரடைந்துள்ளதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பர்ஸ் ஒரு வீடியோவை வெளியிட்டுப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் விரிவான விளக்கமளித்துள்ளார்.
விமானச் சேவைகளை முழுமையாக மீட்டெடுக்கும் பணி "போர்க்கால அடிப்படையில்" நடைபெற்றது என்று உறுதியளித்த எல்பர்ஸ், விமானிகள் பறக்கும் நேர விதிகளை அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து, இண்டிகோ தனது நெட்வொர்க் செயல்பாடுகளில் படிப்படியான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
டிசம்பர் 5- ஆம் தேதி வெறும் 500 விமான சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 8 ஆம் தேதி சேவைகள் 1,800 ஆக அதிகரித்துள்ளது. டிசம்பர் 9 ஆம் தேதி விமான நிறுவனம் 1,800-க்கும் மேற்பட்ட சேவைகளை இயக்கி வருவதாகவும், அனைத்து இடங்களிலும் இயல்பாக்கப்பட்ட சரியான நேரச் செயல்திறனுடன் சேவைகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: போலாம் ரைட்..!! மீண்டும் தொடங்கிய இண்டிகோ விமான சேவை..!! பயணிகள் சற்று நிம்மதி..!!
இண்டிகோவின் இணையதளத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து விமானச் சேவைகளும் தற்போது எந்தவித இடையூறும் இன்றிச் சாதாரணமாகச் செயல்படுவதாகவும் எல்பர்ஸ் உறுதி அளித்தார். விமானப் பயணம் என்பது மக்களின் "ஆசை, உணர்ச்சிகள் மற்றும் அபிலாஷைகளுடன்" தொடர்புடையது என்பதால், எதிர்பாராத இடையூறுகளுக்காக இண்டிகோ நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், சவாலான சூழ்நிலையில் நிறுவனத்தின் முன்னுரிமைகள் குறித்து அவர் விளக்கினார்:
முதலில் பாதிக்கப்பட்ட பயணிகளை அவர்களது இலக்கைச் பாதுகாப்பாகச் சென்றடைய உதவுவது. அடுத்து, ரத்து செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளுக்கும் பணத்தைத் திரும்ப வழங்குவது. இறுதியாக, விமான நிலையங்களில் சிக்கிய அனைத்துப் பயணப் பைகளையும் உரியவர்களிடம் ஒப்படைப்பது. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர் என்றும், சிக்கிய பயணப் பைகளில் பெரும்பாலானவை விநியோகிக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளிலிருந்து ஒரு விமான நிறுவனமாக "வலுவாக வெளிவர" முயற்சிப்பதாக எல்பர்ஸ் கூறினார். உடனடிச் சவால்கள் சமாளிக்கப்பட்டவுடன், இந்த நெருக்கடிக்குக் காரணமான அடிப்படைக் காரணங்களை ஆழமாக ஆராய்வோம் என்றும், இதற்காகத் துறைசார் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வாடிக்கையாளர்களின் "கோபம்" புரிந்துகொள்ளக் கூடியது என்றாலும், செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதால் வாடிக்கையாளர் நம்பிக்கை மீண்டும் வரத் தொடங்கிவிட்டது என்றும், முன்பதிவுகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்றும் பீட்டர் எல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 8வது நாளாக.. இண்டிகோ விமான சேவை பாதிப்பு..!! பரிதவிக்கும் பயணிகள்..!!