பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 15ம் தேதியான நேற்று இரவு சுமார் 9 மணியளவில் டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு வந்த இண்டிகோ விமானம் (6E 2482) பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியது. இந்த விமானத்தில் 173 பயணிகள் இருந்தனர். விமானம் தரையிறங்கும் போது, ரன்வேயில் நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் புள்ளியை (டச் டவுன் பாயிண்ட்) தாண்டி சென்றது, இதனால் பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

பாட்னா விமான நிலையத்தின் ரன்வே நீளம் 2,072 மீட்டர்கள் மட்டுமே உள்ளது, இது பெரிய விமானங்களுக்கு தேவையான 2,800 மீட்டர்களுக்கு குறைவு. இதனால், பைலட்டின் சாமர்த்தியமும் விரைவான முடிவெடுக்கும் திறனும் முக்கிய பங்கு வகித்தன. விமானம் ரன்வேயைத் தாண்டியதும், பைலட் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்கவிட்டு, நான்கு முறை வானில் வட்டமடித்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால், 173 பயணிகளின் உயிர்களும் பாதுகாக்கப்பட்டன.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..!! பள்ளிகளில் இருந்து பதறியடித்து ஓடிய மாணவர்கள்.. பரபரப்பான தலைநகரம்..!
விமான நிலைய அதிகாரிகள், இந்த சம்பவத்திற்கு ரன்வேயின் குறுகிய நீளமும், தொழில்நுட்பக் கோளாறுகளும் காரணமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதேபோல் விமான நிலையத்திற்கு அருகிலேயே பாட்னாவில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்துள்ளன. தலைமை செயலகத்தின் கிளாக் டவர் உள்ளது. கடிகார கோபுரம் காரணமாக விமானத்தை 3.25 டூ 3.5 டிகிரி செங்குத்தான கோணத்தில் விமானத்தை தரையிறக்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், லேண்டிங் செய்வது என்பது கொஞ்சம் கடினமான ஒன்று என சொல்லப்படுகிறது. குறிப்பாக பனிமூட்டம் மற்றும் சவாலான கால நிலைகளின் போது இந்த பணி கொஞ்சம் கடினமானது என்று தெரிவிக்கும் அதிகாரிகள், இந்த பாரம்பரிய டவர் கிளாக்கை 17.5 மீட்டர் உயரம் குறைக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளனர்.

இதற்கு முன்பு, கடந்த ஜூலை 9ம் தேதி அன்று, பறவை மோதியதால் இண்டிகோ விமானம் (6E 5009) அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கியது. விமானத்தின் என்ஜினுக்கு எரிபொருள் சப்ளை செய்யும் ஸ்விட்ச் தடை பட்டதே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் சமீப காலமாக விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்படுவது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இன்று நடந்த இந்த சம்பவம், பாட்னா விமான நிலையத்தில் பறவைகள் மற்றும் பிற இடர்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. தற்போது, இந்த விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..