இன்று உலகம் முழுவதும் ‘சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்ட நிலையில், இந்த தினம் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
விலை மலிவு மற்றும் வசதியான பயன்பாடு காரணமாக டீ கோப்பைகள், தட்டுகள், உறிஞ்சு குழாய்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் நிறைந்துள்ளன. மளிகை கடைகள் முதல் உணவு விடுதிகள் வரை இவை தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. ஆனால், இந்தப் பொருட்கள் மட்குவதற்கு 100 முதல் 500 ஆண்டுகள் வரை ஆகும் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. இது பூமியின் சுற்றுச்சூழலுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
பிளாஸ்டிக் குப்பைகளை உணவு என நினைத்து உட்கொள்ளும் பசுக்கள், பறவைகள் மற்றும் கடல் உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழக்கின்றன. சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால்களில் பிளாஸ்டிக் பைகள் அடைப்பு ஏற்படுத்துவதால் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கிறது. மேலும், பிளாஸ்டிக்கை எரிக்கும் போது வெளியாகும் நச்சு புகை மனிதர்களுக்கு புற்றுநோய், சுவாசப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: 8-வது ஊதியக் குழு அப்டேட்: அரசு ஊழியர்களின் புதிய சம்பள கணக்கு இதோ..!!

இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு 2019-ம் ஆண்டு முதல் ஒரு முறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், கோப்பைகள், கைப்பைகள் (பல்வேறு மைக்ரான் அளவுகள்), உறிஞ்சு குழாய்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். தடை அமல்படுத்தப்பட்ட பின்னர் அதிகாரிகள் சட்டவிரோத தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்து, டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்து, அபராதங்களும் விதித்து வருகின்றனர்.
எனினும், பல ஆண்டுகள் கடந்தும் மளிகை, பேக்கரி, காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. அரசின் ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் மூலம் துணிப்பைகள், காகிதப் பைகள் மற்றும் சணல் பைகளை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முழுமையான வெற்றி இன்னும் கிடைக்கவில்லை.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், “அரசின் சட்ட நடவடிக்கை மட்டும் போதாது. உற்பத்தியாளர்கள் ஒத்துழைப்பு அவசியம். பிளாஸ்டிக் உற்பத்தியை முழுமையாக நிறுத்தினால் பயன்பாடும் தானாகக் குறையும்” என்கின்றனர்.
இன்றைய தினத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்போம் என்ற உறுதிமொழி ஏற்போம். துணிப்பைகளைப் பழக்கப்படுத்தி, வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான பூமியை விட்டுச் செல்வோம். பிளாஸ்டிக் இல்லாத பசுமை உலகம் நம் கைகளில் தான் உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 40 இடங்களில் ரெய்டு..! மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்கு குறி..! அதிரடி நடவடிக்கை..!