குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன், சேலை அணிந்தபடியும் காலில் செருப்பு கூட இல்லாமலும் 1600 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று சாதனை படைத்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கவிதா குமாரியின் இந்த முயற்சி, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கவிதா குமாரி. கணவரை இழந்த நிலையில், வருமானத்திற்கு வழியின்றி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான மாமனார், மாமியாரை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தின் எதிர்காலத்திற்காக வேலை தேடி வந்த கவிதாவுக்கு, ஊர்க்காவல் படையில் ஆட்கள் தேர்வு நடைபெறுவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அதற்கான பணிக்கு விண்ணப்பித்த அவர், உடல் தகுதி தேர்வில் பங்கேற்க சென்றார். ஓட்டப்பந்தயத்திற்கான முறையான காலணி, விளையாட்டு உடை என எதுவும் அவரிடம் இல்லை. இருப்பினும், அதற்காக அவர் பின்வாங்கவில்லை. வழக்கமாக அணியும் சேலையிலேயே, வெறும் கால்களுடன் 1600 மீட்டர் ஓட்டத்தில் களமிறங்கினார்.
இதையும் படிங்க: மணல் கடத்தல் லாரியை போலீஸ் விரட்டியபோது பயங்கர விபத்து! அடுத்த நொடி நடந்த விபரீதம்! வைரல் காட்சி!

உடல் தகுதி தேர்வில் 1600 மீட்டர் தூரத்தை 10 நிமிடங்களுக்குள் கடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கவிதா அதனை வெறும் 6 நிமிடங்களில் ஓடி முடித்ததாக கூறப்படுகிறது. அவரது ஓட்டத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
Barefoot. In a saree. Running for a Home Guard job. 🥹 No spikes. No tracksuit. No coaching. Just a dream and her determination. Ramgarh, Jharkhand 🇮🇳 She ran like her whole future depended on it. Because it did. https://t.co/QPgcHnBY2K
— News Matrix (@NewsMatrixIND) October 6, 2026
தனது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே தனக்கு இவ்வளவு வேகமாக ஓடுவதற்கான சக்தியை கொடுத்ததாக கவிதா தெரிவித்துள்ளார். குடும்பத்தின் பொறுப்பை சுமந்தபடியே, வேலை வாய்ப்புக்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“இது ஒரு பெண்ணின் ஓட்டம் மட்டுமல்ல; குழந்தைகளுக்காக ஓடும் ஒரு தாயின் ஓட்டம்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து, கவிதாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவரது முயற்சிக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!