டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்தின்போது கண்டெடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டு மூட்டைகள் விவகாரத்தில் பாராளுமன்ற விசாரணைக் குழு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வசித்த அரசு பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட மீட்புப் பணியின்போது, வீட்டின் ஒரு அறையில் எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதையடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தனர்.
இதையும் படிங்க: பதுக்கிய பண மூட்டை எரிந்த விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி! கிடுக்குப்பிடி!
இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்தக் குழுவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தாவும் ஒருவராக உள்ளார். அவர் வரும் மார்ச் 6-ஆம் தேதி பதவி ஓய்வு பெற இருப்பதால், விசாரணை வேகம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, விசாரணையை ரத்து செய்யக் கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட், பாராளுமன்ற விசாரணைக் குழு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்று அனுமதி அளித்தது. இதன்படி, விசாரணைக் குழு தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
விசாரணைக் குழு உறுப்பினர்கள் யஷ்வந்த் வர்மாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தின் போது கண்டெடுக்கப்பட்ட பண மூட்டைகளின் மூலம், அவை எங்கிருந்து வந்தன, யாருடையவை, எவ்வாறு சேர்ந்தன என்பது உள்ளிட்ட விவரங்களை ஆழமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த வழக்கு நீதித்துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த சம்பவம் நீதித்துறையின் நம்பகத்தன்மை மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களிடையே இந்த விவகாரம் தொடர்ந்து பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய் முதல்வராக விரும்பல! முதல்வர்தான் விஜய் ஆக விரும்புறாரு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலாய்க்கும் தவெக!